எம்.எஸ். உதயமூர்த்தி

அமெரிக்காவில் கைநிறைய சம்பளம், பிரகாசமான எதிர்காலம், சுகபோகமான வாழ்க்கை… இப்படி எல்லாவற்றையும் துறந்து விட்டு, தான் கற்ற கல்வியும் பெற்ற ஞானமும் தமிழக மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற உன்னத நோக்கில் தன் வாழ்க்கையை தமிழ் மக்களுக்கு தியாகம் செய்தவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி. “உன்னால் முடியும் தம்பி” என்ற தன்முனைப்புத் தூண்டல் நூலை 1980ம் ஆண்டுகளில் எழுதி முத்திரை பதித்த உதயமூர்த்தி பின்னர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டார்.

அவரது எழுத்துக்களைப் படித்துவிட்டு அதன் மூலம் தங்களின் வாழ்க்கைப் பாதையை செப்பனிட்டுக் கொண்டவர்களும், புதிய சிந்தனைகளோடு செதுக்கிக் கொண்டவர்களும் ஏராளம். இவர், செம்பனார்கோயில் பகுதிகளில் இருக்கும் வற்றிய நீர்நிலைகளில் தொண்டர்களுடன் சேர்ந்து தூர்வாரி நீர்வளத்தைப் பெருக்கிக் காட்டினார். இதன் மூலம் சாமானிய மக்கள் ஒன்று சேர்ந்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதற்கு சான்றாக விளங்கியவர். இவரது இந்த செயலுக்கு பிறகுதான் பல கிராமங்களில் மக்கள் அரசை எதிர்பார்க்காமல் தாங்களே தங்களது கிராமத்திற்கான பாதையை போட்டுக் கொண்டனர்; சாலையை சீரமைத்தனர்.

1988ல் “மக்கள் சக்தி” என்ற பெயரிலான மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்கி வழிநடத்தினார். பிற்காலத்தில் மலேசியாவில் பிரபலமடைந்த மக்கள் சக்தி என்ற வாசகம் அவரது இயக்கத்தின் பெயர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேசத்தில் உள்ள நதிகளை பாரபட்சமின்றி பொது நோக்கில் ஒருங்கிணைப்பதன் மூலம் பாரதம் மேலும் வளம் பெற முடியும் என்பதில் நம்பிக்கை கொண்ட உதயமூர்த்தி அதற்காக தீவிர பிரச்சாரத்தையும் கிராமங்களில் மேற்கொண்டார்.

எம்.எஸ். உதயமூர்த்தியின் நினைவு தினம் இன்று