60 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலை யாத்திரை சென்று ஐயப்பன் தரிசனம் பெற்ற மகா குருசாமி எம்.என். நம்பியார். சபரிமலையை முதன்முதலில் தமிழகத்தில் பிரபலமாக்கியவர் நவாப் ராஜமாணிக்கம்பிள்ளை. இவர்தான் சபரிமலை ஐயப்பனைப் பற்றிச் சொல்லி, எம்.என். நம்பியாரை மாலை போட வைத்தவர். அவருக்கடுத்து ஒரு மாநிலத்தின் கோயிலாக இருந்த சபரிமலையை, தமிழகம் மட்டுமல்லாமல், தேசமெங்கும் பிரபலப்படுத்திய புகழ் நம்பியாரையே சேரும்.
இதற்காக அவர் கையில் எடுத்துக்கொண்ட அஸ்திரம்; வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்க்கச் செய்யும் பிரபலங்கள். சபரிமலை ஐயப்பனின் மகிமையை உலகெங்கும் கொண்டு செல்ல அவர், மாலை அணிவித்து சபரிமலைக்கு அழைத்துச் சென்ற பிரபலங்கள் ஏராளம். அமிதாப் பச்சன், சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கன்னட நடிகர் ராஜ்குமார் போன்ற பிரபல நடிகர்கள் கன்னிசாமியாக மாலை அணிந்து மலைக்குப் புறப்பட்டபோது, அவர்களுக்கு நம்பியார்தான் குருசாமி.
நம்பியார் தன்னை `குருசாமி’ என்று ஒருபோதும் சொல்லிக்கொண்டது இல்லை. `நான் உங்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்லவில்லை; உங்களுடன் நானும் பயணிக்கிறேன், அவ்வளவுதான்’ என்பார். அதேபோல குருசாமி யார்? என்பதற்கு புதிய விளக்கமும் தந்தார். `18 முறை சபரிமலைக்குச் சென்றவர்களெல்லாம் குருசாமியல்ல. அவர்கள் அப்போதுதான் கன்னிசாமி ஆகிறார்கள். இதுபோல 18 முறை கன்னிசாமியாக இருந்தவர்தான் குருசாமி’ என்று கூறுவார். அதாவது 324 வருடங்கள் சபரிமலை சென்றவர்தான் குருசாமியாக முடியும். ஐயப்பன் ஒருவரே குருசாமி, சாதாரண மனிதர்களால் அது முடியாது என்பதையே அவரது பாணியில் உணர்த்துவார்.
ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, 41 நாட்கள் விரதமிருந்து, சபரிமலைக்குச் செல்லும் கார்த்திகை மாதத்தை `ஐயப்பன் சீசன்’ என்போம். ஆனால் அவரோ, `ஐயப்பனுக்கு ஏதுடா சீசன்… இது என்ன ஊட்டியா, கொடைக்கானலா?’ என்பார் அவர் பாணியில்.`அந்த 41 விரத நாட்கள், நம்மை தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க மேற்கொள்ளும் பயிற்சி. ஒருமுறை மாலை போட்டு விட்டால், அதற்குப் பிறகு வாழ்நாள் முழுக்க நாம் ஐயப்ப பக்தர்களே. எனவே, அந்த விரதமுறை, ஐயப்பனுக்காக நாம் செய்யும் தியாகம் அல்ல. அதனால் அவனுக்கு ஒரு பயனும் இல்லை. அது உன்னை நல்வழிப்படுத்தி, உனக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுப்பதற்காகத்தான் என்பதை உணர்ந்து, மனசாட்சிக்கு உட்பட்டு அதனை நேர்மையாகக் கடைபிடி. சபரிமலைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தரும் தன் தாயின் கையால்தான் மாலை போட்டுக்கொள்ள வேண்டும்; பெற்றோரின் விருப்பமில்லாமல் மாலை போடக்கூடாது’ என்பார்.