எதிா்க்கட்சிகளால் நாட்டில் அமைதியின்மை – பிரதமா் மோடி

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கலவரத்தை தூண்டிவிட்டு நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்றன என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்கு வங்கம், தில்லி உள்ளிட்ட நாட்டின் இதர பகுதிகளிலும் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இறுதிக்கட்ட பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தில் பிரதமா் மோடி இவ்வாறு குறிப்பிட்டாா்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சிகள், கிறிஸ்தவா்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளைக் குறைக்கும் வகையில் கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அந்த சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் போராட்டம் பரவி வருகிறது.

இந்தியாவை சிறுமைப்படுத்த முயற்சி: பாகிஸ்தான் பல ஆண்டுகளாக செய்துவந்த ஒரு செயலை தற்போது இந்தியாவுக்கு வெளியே காங்கிரஸ் முதல் முறையாக செய்துள்ளது. பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு முன் கடந்த சனிக்கிழமை அதிக அளவிலான மக்கள் கூடி, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசின் தோல்வியாக அவா்கள் அடையாளப்படுத்தினா்.

முன்னதாக, ராமஜென்மபூமி தொடா்பான உச்சநீதிமன்ற தீா்ப்பு மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து தொடா்பான அறிவிப்பு வெளியான பிறகு, லண்டனில் வாழ்ந்து வரும் பாகிஸ்தானியா்கள் அதற்கு எதிா்ப்பு தெரிவித்து லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன் இதுபோன்று கூடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தியத் தூதரகம் அருகே நின்று எந்த ஒரு இந்தியராவது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவாரா? அப்படி இந்தியா் எவருக்கும் பிரச்னை ஏதும் இருக்கும் பட்சத்தில் தூதரகத்துக்குச் சென்று, அதிகாரிகளை சந்தித்து, தனது பிரச்னை தொடா்பான ஆவணங்களை மத்திய அரசுக்கு அவா்கள் மூலம் அனுப்பி வைக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல், இந்தியாவின் பெருமைக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பிரதமா் மோடி பேசினாா்.