புதுவை, விஜயகுமார் ஓரிரு நாட்களுக்கு முன் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய கோரிக்கைகள் எழுகின்றன.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது நல்லதுதான். எனினும் தற்கொலைக்கு நமது ஆசைகள், ஸ்திரமற்ற மனது, வாழ்க்கைமுறை, சூழலுக்கு ஏற்ப மாறாதது, முறையற்ற திட்டமிடல், சகவாசம் போன்ற பல காரணங்கள் உண்டு.
ஒருவருக்கு வாழ்நாளில் ஆறு முறையாவது தற்கொலை எண்ணம் வரும் என்கிறது ஒரு ஆராய்ச்சி.
பள்ளி தேர்வு, குடும்பப் பிரச்சனை, விவசாயம், வியாபாரம் என எந்த விஷயத்திற்கும் தற்கொலை தீர்வல்ல. நாம் பயணிக்க முடியாத பாதையை இறைவன் ஒரு நாளும் அமைப்பதில்லை. அனைத்திற்கும் ஒரு வழி கண்டிப்பாக உண்டு.
தற்கொலையை தடுக்க, வாழ்வில் தோல்விகள் சகஜம் என்பதை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள். குடும்ப விஷயத்தில் விட்டுக்கொடுப்பதும், மனம் விட்டு பேசுவதும் பிரச்சனையை தீர்க்கும்.
விவசாயம், வியாபாரம், பங்கு சந்தைகளில் லாபமும் நஷ்டமும் சகஜம், ஆசை ஆனால் பேராசை கூடாது.
தற்கொலை எண்ணம் வந்தால் முதலில் அமைதியாக சிந்தித்திடுங்கள். பெரியவர்களுடனும் மனநல மருத்துவருடனும் ஆலோசியுங்கள். கடந்த காலத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள், எதார்த்தத்தை உணருங்கள். மாற்றுவழிகளை ஆராய்ந்திடுங்கள்.
எதிர்காலத்தை திட்டமிடுங்கள். வாழ்வில் எதற்கும் ஒரு எல்லை வைத்து அதை தாண்டாமல் இருப்பது நமக்கும் குடும்பத்திற்கும் என்றும் நல்லது.
நல்லதோ கெட்டதோ, எதுவும் நிரந்தரமில்லை. இதுவும் கடந்துபோகும்.