எங்கு வாழ்ந்தாலும் தாய்நாட்டுக்கு உழையுங்கள்!

”எந்த நாட்டில் வாழ்ந்தாலும், தாய்நாட்டின் முன்னேற்றத்துக்கு உழைக்க வேண்டும். புதிய கண்டு பிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும்,” என, ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு, பிரதமர் மோடி அறிவுரை கூறினார்.

அபார நம்பிக்கை

மாணவர்கள் மத்தி யில், பிரதமர் மோடி பேசியதாவது:சென்னை, ஐ.ஐ.டி., யானது, மிக முக்கியமான கல்வி நிறுவனம். இங்கு மலைகளும் நகரும்; ஆறுகளும் நிற்கும் என, சொல்லப்படுகிறது. இப்போது நாம், உலகிலேயே சிறப்பு மிக்க, மிகவும் பழமையான தமிழ் மொழியின் தாயகமான, தமிழ்நாட்டில் இருக்கிறோம். அதேபோல, உலகி லேயே மிகவும் நவீனமான, சென்னை, ஐ.ஐ.டி., என்ற புதிய மொழிக்கும், தமிழகம் தாயகமாக உள்ளது.இங்கு நடத்தப்படும், ‘சாரங்க் மற்றும் சாஸ்த்ரா’ போன்ற, மாணவர்களின் கண்டுபிடிப்புக்கான விழாக்களில், நாங்கள் பங்கேற்க தவறுகிறோம். உலகமே வியந்து பார்க்கும், முக்கிய கல்வி நிறுவனத்தில் படித்து, பட்டம் பெறும் வாய்ப்பை, நீங்கள் பெற்றுள்ளீர்கள். நான் அமெரிக்காவில், தொழில் நிறுவன பிரதிநிதிகள், கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்களிடம் பேச்சு நடத்தினேன். அவர்களில் பெரும்பாலானவர்களிடம், புதிய இந்தியாவை உருவாக்கு வதற்கான நம்பிக்கை தெரிந்தது. இந்திய இளம் சமுதாயத்தின் மீது, அவர்களுக்கு அபார நம்பிக்கை தெரிகிறது.உங்களை போன்று, ஐ.ஐ.டி., வழியாக படித்தவர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில், சர்வதேச அளவில் சாதனை படைக்கின்றனர்.மத்திய அரசின், யு.பி.எஸ்.சி., தேர்வுகளில் வெற்றி பெற்ற, பல இளம் அதிகாரிகளிடம், நான் பேசியிருக்கிறேன். அவர்களில் பலர், ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர்களாக உள்ளனர்.

சாதனை காலம்

மேலும், மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுவோரில் பலர், ஐ.ஐ.டி.,யில் படித்தவர்களாக உள்ளனர். எனவே, உங்கள் வழியாக, இந்தியாவை செழிப்பான நாடாக மாற்ற முடியும். புதிய கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம், கூட்டு முயற்சி ஆகிய, மூன்று துாண்கள் வழியாக, 21ம் நுாற்றாண்டை, இந்தியாவின் சாதனை காலமாக மாற்ற முடியும். சிங்கப்பூர் நாட்டுடன் இணைந்து, இந்தியாவிலும், உலகிலும் முன்னணியில் வருவதற்கான பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டோம். உங்கள் கண்டுபிடிப்பு, ஆற்றல் வழியாக, இந்தியா, பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி செல்கிறது. சர்வதேச போட்டியாளராக, இந்தியா மாறும் வாய்ப்புள்ளது. இங்குள்ள மாணவர்கள், தொழில் முனைவோராக உருவாக்கப்படுகின்றனர். பசியுடன், துாக்கமும் இல்லாமல், புதிய கண்டுபிடிப்புகளுக்காக, மாணவர்கள் உழைப்பதை காண முடிகிறது. புதிய கண்டுபிடிப்புக்கான உணர்வுகள், அவர்களிடம் மேலோங்கி இருப்பது தெரிகிறது. பல கல்வி நிறுவனங்களில், ‘அடல் தொழில்நுட்ப மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் வழியாக, மாணவர்கள், தங்கள் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளலாம்.

உதவித்தொகை

அந்த கண்டுபிடிப்புகளை, உலக சந்தைக்கு எடுத்து வர வேண்டும். இது, ஒரு சவாலான விஷயம். எனவே, புதிய கண்டுபிடிப்பை சந்தைப்படுத்து வதில், உதவ தயாராக உள்ளோம்.இதற்காக, மாணவர்களுக்கு, பிரதமர் ஆராய்ச்சி திட்டத்தில், கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.

பின்னர், நீங்கள் எங்கே வேலை பார்க்கிறீர்கள், எங்கே வாழ்கிறீர்கள் என்பது விஷயமல்ல. ஆனால், உங்கள் தாய்நாட்டின் முன்னேற்றத்தை, உங்கள் எண்ணங்களில் வைத்து, புதிய கண்டுபிடிப்பை மேற்கொள்ளுங்கள். உங்களது கண்டுபிடிப்பும், உழைப்பும், இந்தியர்களுக்கு பயன்படும்படி இருக்க வேண்டும். இது, சமூக பொறுப்புடைமைஆகும் என்று பேசினார்.