பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதி திட்டத்தின் கீழ், நடைபெற்ற நிகழ்ச்சியில் 1 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு நேற்று கடன் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடனுக்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
என்னை பற்றி எப்போதும் அவதூறு பேசுவதற்காகவே இண்டியா கூட்டணியில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ஊழல், தவறான நிர்வாகம், தேசத்துக்கு எதிரான விஷயங்களை தூண்டுவதுதான் அவர்களின் கொள்கை. சாலையோர வியாபாரிகளின் நலனில் முந்தைய அரசுகள் அக்கறை செலுத்தவில்லை. உங்களின் சேவகனாகிய நான் ஏழ்மையில் இருந்து வந்துள்ளேன். நான் ஏழ்மையில் வாழ்ந்துள்ளேன். அதனால்தான் யாரும் கண்டுகொள்ளாதவர்கள் மீது நான் அக்கறை செலுத்துகிறேன். சொத்துகளை அடமானம் வைத்து கடன் பெற முடியாதவர்களுக்கு மோடியின் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000, ரூ.20,000, மற்றும் ரூ.50,000 கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை 62 லட்சம் பேர் ரூ.11,000 கோடி பெற்றுபயனடைந்துள்ளனர். இதில் பாதிபேர் பெண்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. கரோனா சமயத்தில் தொடங்கப்பட்ட பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தால், சாலையோர வியாபாரிகளின் வருவாய் பலமடங்குஅதிகரித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கடனை முறையாக திருப்பிச் செலுத்தபவர்களுக்கு ரூ.1,200 ஒவ்வொரு ஆண்டும் திரும்ப அளிக்கப்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.