உலக ரேபிஸ் தினம்

ரேபிஸ் நோய்க்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த லூயிஸ் பாஸ்டர் நினைவாக செப்டம்பர் 28, ரேபிஸ் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக ரேபிஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ரேபிஸ் என்பது, மூளையைத் தாக்கும் ஒரு வைரஸின் பெயர். இந்த வைரஸ் ஒரு மிருகத்தைத் தாக்கும்போது, அதற்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்படும். அந்த மிருகம் நம்மைத் தாக்கும் பட்சத்தில், நமக்கும் அது ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, நாய், பூனை போன்றவை கடித்துவிட்டாலோ, நகத்தால் பிராண்டினாலோ உடனடியாக மருத்துவரை அணுகி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள், அவற்றிடம் ஏதாவது மாற்றம் தெரிந்தால், உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். தனிமையில் இருக்கும் குழந்தைகளை நாய், பூனையோடு விளையாட விட்டுச் செல்லவேண்டாம். முறையாக செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் பட்சத்தில், பிரச்னை இல்லை.

பாதிக்கப்பட்ட விலங்குகள், எச்சிலை வடித்தபடியும், காலை அடிக்கடி நக்கிக்கொண்டு இருக்கும். அப்படி தெரியும் பட்சத்தில், உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகவேண்டும். வைரஸ் தாக்கிய நாய்கள், ஆக்ரோஷமாக பார்ப்பவர்களை எல்லாம் தாக்கும் என்றில்லை. சில நாய்கள் மிகவும் அமைதியாககூட இருக்கும். பாதிக்கப்பட்ட விலங்குகளின் எச்சிலில்கூட பாதிப்பு இருக்கும்.

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் முன்னெச்சரிக்கையோடு, குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை அவற்றை கால்நடை மருத்துவர்களிடம் காட்ட வேண்டியது அவசியம். பாதிக்கபட்டவர்களும் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.