புலால் உண்பதை தவிர்க்க வலியுறுத்தி திருக்குறளில் வள்ளுவர், ‘புலால் மறுத்தல்’ என ஒரு அதிகாரத்தையே எழுதியுள்ளார். உலக சைவ தினம் என்பது நவம்பர் 1ம் தேதி உலகெங்கிலும் உள்ள சைவ உணவு உண்பவர்களால் கொண்டாடப்படுகிறது. வட அமெரிக்க சைவக் கழகம் 1977ல் இத்தினத்தை அறிவித்தது. இதனை 1978ல் சர்வதேச சைவ ஒன்றியம் அங்கீகரித்தது. மகிழ்ச்சி, கருணை, சைவ வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
ஆனால், இது ஒன்றும் வெளிநாட்டில் தோன்றிய பழக்கம் அல்ல. நமது மூதாதையர்கள் தங்கள் கடல் கடந்த வெளிநாட்டு பயணங்கள் வாயிலாகவும், பாரதத்தை ஆண்ட ஆங்கிலேயர்கள் நமது சைவ உணவு பழக்கத்தையும் அதனால் வரும் நன்மைகளையும் அறிந்துகொண்டு வெளிநாடுகளில் பரப்பியதன் விளைவாகவுமே இது உலகெங்கும் பரவியது.
நாம் இவ்வுலகில் அசைவ உணவை உண்டால் தான் வாழ முடியும் என்பதில்லை. சைவ உணவுகளிலேயே அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. சொல்லப்போனால், அசைவம் உண்பவர்களைவிட சைவ உணவை உண்பவர்கள்தான் அதிக ஆரோக்கியத்தோடும் நோய் எதிர்ப்பு சக்தியோடும் உள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.
ஐந்து அறிவு இருக்கும் மிருகங்களுக்குத் தான் தங்கள் உணவை உற்பத்தி செய்து சாப்பிடத் தெரியாது, அதனால் அவை மற்ற உயிர்களை சார்ந்து வாழ்கின்றன. ஆனால் ஆறு அறிவு படைத்த மக்களுக்கு தன் உணவு தாமே தயாரித்து உண்ணும் அளவில் அறிவு இருக்கிறது. எனினும் மற்ற உயிர்களையும் ஒரு வகையில் நாம் சார்ந்தே வாழ்கிறோம்.
மனிதனின் உடல்வாகு இயற்கையிலேயே சைவ உணவை உண்டு வாழும் வகையிலேயே படைக்கப்பட்டு உள்ளது. அசைவ உணவுகளை சாப்பிட்டால் அது ஜீரணம் ஆக அதிக நேரம் ஆகும். இதனாலேயே நிறைய உடல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆனால் சைவ உணவுகள் எளிதில் ஜீரணமாகிவிடும். ஆகவே விலங்குகளை கொன்று சாப்பிடுவதை விட, நாம் உற்பத்தி செய்யும் உணவுகளான, காய்கறி, பழங்கள், பயிர்கள், கீரைகள் உள்ளிட்டவைகளை சாப்பிட்டாலே, நாம் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழலாம். முயற்சிப்போம்.