உத்தராகண்ட் கலாவதி: மாஃபியாவை தோற்கடித்த மாதரசி

 

ஒரு படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண், ஊழல்மிக்க அரசு அதிகாரிகளையும் மாஃபியா கும்பலையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றார் என்றால் நம்பமுடிகிறதா? அந்தப் பெண், உத்தராகண்ட் சமோலி மாவட்டத்தின், பச்சேர் என்ற குக்கிராமத்தை சேர்ந்த கலாவதி தேவி ராவத்.

1980ல் திருமணமாகி பச்சேர் கிராமத்திற்கு வந்த கலாவதி, அங்கு மின்சார வசதி இன்றி கிராமத்தினர் தவிப்பதைப் பார்த்தார். அதிகாரிகளின் அலட்சியமே இந்நிலைக்குக் காரணம் என்பதை அறிந்த 17வயது கலாவதி, பெண்களை ஒன்று திரட்டி, 25 கி.மீபயணித்து மாவட்டத்தின் தலைமை அரசு அதிகாரிகளை சந்தித்து முறையிட்டார். ஆனால் அவர்களின் கோரிக்கை அதிகார வர்க்கத்தின் காதில் விழவில்லை. ஏமாற்றத்துடன் கிராமத்திற்கு திரும்பியவர்கள் மலையடிவாரத்தில் மின்சார கம்பங்களும் மின் கம்பிகளும் வைக்கப்பட்டிருந்ததை பார்த்தனர். கலாவதி மனதில் திட்டம் ஒன்று உதிக்க, பெண்கள் அனைவரும் மிகுந்த சிரமத்துடன் அவற்றை கிராமத்திற்குக் கொண்டு இதை அறிந்த அதிகாரிகள், கலாவதியின் மேல் கிரிமினல் குற்றம் சாட்டப்படும் என்று எச்சரித்தனர். ஆனால் விஷயம் தெரிந்து மேலும் பல பெண்கள் ஒன்று திரண்டு தங்களையும் சிறைக்கு அனுப்பும்படி போலீசாரிடம் வாதம் செய, திகைத்துப்போன அதிகாரிகள் இறுதியில் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கிராமத்திற்கு மின்வசதி அளித்தனர்.

1985ம் வருடம், பெண்களுடன் தாந்த்ரி காட்டில் விறகு சேகரிக்க சென்ற கலாவதி அங்கு அதிகளவில் மரங்கள் வெட்டப்படுவதை பார்த்து அதிர்ந்தார். 1970களில் மரங்களைக் கட்டிப்பிடித்து போராட்டம் நடத்திய ‘சிப்கோ’ இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான கலாவதி, பெண்களோடு சென்று மரங்களை வெட்டக்கூடாது என்று முறையிட்டார். யாரும் கேட்காமல் போகவே, பெண்கள் அனைவரையும் மரங்களை கட்டிப்பிடித்து போராடச் சொன்னார். இதனால் ஆத்திரமடைந்த மாஃபியா கும்பலை போராட்டத்தை கைவிட்டால் அதிக பணம் கொடுப்பதாக கூறினர். மறுத்தால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினர். ஆனால் பெண்கள் தங்கள் போராட்டத்தில் இருந்து பின் வாங்க வில்லை. குழு ஒன்றை அமைத்து காடுகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இவர்களின் தொடர் முயற்சியால் தாந்த்ரி காட்டில் மரம்வெட்டப்பட மாட்டாது என்றுஉறுதியளிக்கப்பட்டது. எனினும் தங்கள் கிராமத்தில் குடிப்பழக்கம் உள்ள ஆண்களை மாஃபியா கும்பல் பயன்படுத்திக் கொள்ளும் என்பதை அறிந்த கலாவதி, இந்தப் பிரச்சினையை முழுமையாக தீர்க்க தன் கிராமத்தில் உள்ள மதுக்கடைகளை பெண்களுடன் சென்று அழித்தார்.

தான் போராடி பெற்ற மாற்றங்கள் நிலையாக இருக்க பஞ்சாயத்து தேர்தலில் நிற்க முடிவெடுத்தார் கலாவதி. இவரது முடிவுக்கு அவரது கணவர் உட்பட சமுதாயத்தில் பலர் எதிர்ப்பு தேர்தலில் பெண்கள் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தார். இறுதியில் அரசு அவரது கோரிக்கைக்கு சம்மதிக்க, தேர்தலில் நின்று கலாவதி வெற்றி பெற்றார். பெண்களுக்கு ஓர் உதாரணமாகத் திகழும் கலாவதி தேவி ராவத் தன் சாதனைகளுக்காக பல விருதுகளை பெற்றபோதும் தன் கிராமத்தினரிடம் இருந்து கிடைத்த ஆதரவையே தனக்குக் கிடைத்த சிறந்த விருதாக கருதுகிறார்.