கோவை மாவட்டம் கோபி ராசிபுரத்தை சேர்ந்தவர் கோபால்சாமி. விவசாயியான இவர் ஒட்டர் பாளையம் வி.ஏ.ஓ கலைச்செல்வியிடம் இட கிரையம் சம்பந்தமான ஆவணங்களை பெறச்சென்ற பொழுது வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை வி.ஏ.ஓவின் உதவியாளர் முத்துச்சாமி தட்டிக்கேட்டார். வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. கோபால்சாமியை முத்துசாமி தள்ளி விட்டார். பின்னர் கீழே விழுந்த கோபால்சாமியிடம் முத்துசாமி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பானது. பட்டியலினத்தை சேர்ந்த அரசு ஊழியரை விவசாயி காலில் விழவைத்தார் என பிரச்சனை வேறு பக்கம் திரும்பியது. ஆட்சியர் உத்தரவின் பேரில் விசாரணை குழு விசாரித்து வருகிறது. இதனிடையே, கோபால்சாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், முத்துசாமி தன்னை தாக்கினார், தனது தந்தை சொத்தை தனக்கு தெரியாமல் வி.ஏ.ஓ வேறு ஒருவருக்கு பெயர் மாற்றி கொடுத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே வெளியான வீடியோவுக்கு நேர்மாறாக வி.ஏஓ.வின் உதவியாளர் முத்துசாமி, விவசாயி கோபால்சாமியை முதலில் தாக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வீடியோ எடுக்கப்படுகிறது என தெரிந்ததும் காலில் விழுவதாக நடித்ததும் அம்பலமாகியுள்ளது.