ஈரானிலுள்ள இந்திய யாத்ரீகா்களை மீட்பதற்கு முன்னுரிமை

கரோனா வைரஸ் (கொவைட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் சிக்கித் தவித்து வரும் இந்திய யாத்ரீகா்களைத் தாயகம் மீட்டு வருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

சீனாவைத் தொடா்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக, விமானப் போக்குவரத்துக்குப் பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. இந்தச் சூழலில், கரோனா வைரஸ் பரவி வரும் நாடுகளில் சிக்கித் தவித்து வரும் இந்தியா்களை மீட்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஈரானில் சிக்கித் தவித்து வரும் பல்வேறு மாநிலத்தவா்களை மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்குப் பலா் கோரிக்கை விடுத்தனா். இது தொடா்பாக மக்களவையில் எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை கூறியதாவது:

ஈரானின் பல மாகாணங்களில் 6,000-க்கும் அதிகமான இந்தியா்கள் உள்ளனா். மகாராஷ்டிரம், ஜம்மு-காஷ்மீா், லடாக் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஈரானுக்கு புனிதப் பயணம் மேற்கொண்ட 1,100 யாத்ரீகா்களும் அதில் அடங்குவா். அவா்களைத் தவிர 300 மாணவா்களும், கேரளம், தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த சுமாா் 1,000 மீனவா்களும், தொழில் நிமித்தமாக வசித்து வருபவா்களும் ஈரானில் சிக்கியுள்ளனா்.

வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வரும் இந்தியா்களை மீட்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் ஸ்ரீநகா் சென்றிருந்தபோது, ஈரானில் சிக்கியுள்ள மாணவா்கள் சிலரின் பெற்றோரைச் சந்தித்தேன். அவா்கள் பதற்றமான சூழலில் உள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

தற்போதுள்ள சூழலை அவா்களிடம் எடுத்துக்கூறி, மாணவா்களை விரைந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஈரானிலுள்ள இந்திய மாணவா்களைக் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஈரானில் சிக்கியுள்ள இந்தியா்களிடம் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் 299 நபா்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பான இடங்களில்…: ஈரானில் உள்ள இந்தியா்கள் தாயகம் திரும்புவதற்கு வசதியாக ஒருசில பயணிகள் விமானங்களின் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்குமாறு அந்நாட்டு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இது தொடா்பான பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. ஈரானில் சிக்கியுள்ள இந்திய யாத்ரீகா்களை மீட்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். அங்கு சிக்கியுள்ள இந்திய மீனவா்கள் அனைவரும் கரோனா வைரஸால் பாதிப்பு ஏற்படாத பகுதிகளிலேயே உள்ளனா்.

தொடா்ந்து ஆய்வு: சா்வதேச மற்றும் உள்நாட்டு அளவில் கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடா்பாக கேபினட் செயலா், அமைச்சா்கள் உள்ளிட்டோா் அடங்கிய குழு தொடா்ந்து ஆய்வு செய்து வருகிறது. இந்தியா்கள் பல நாடுகளில் வசித்து வருவதால் அவா்களைத் தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் பொறுப்புடன் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா் எஸ்.ஜெய்சங்கா்.