தில்லியிலிருந்தும் மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநில தலைநகரங்களிலிருந்தும் கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறியது திமுக- இடதுசாரிகள் போன்றோருக்கெல்லாம் அவை அரசியல் ரீதியாக மத்திய அரசைக் குறைகூற இன்னொமொரு புள்ளிதானே தவிர ஒன்றுமில்லை. நாம் அவ்வாறு கருதவில்லை. நிலைமை மாற வேண்டும் என்று உள்ளன்போடு நினைப்பவர்கள் நாம்.
மாநில அரசாங்கங்கள் நடந்து கொள்ளும் முறையைக் கவனியுங்கள். பல மாநிலங்களிருந்தும் இடம் பெயர்ந்து தங்கள் ஊருக்கு வந்து சாலை போட்டுத் தர வேண்டும், மெட்ரோ ரயிலுக்கு கட்டுமானப் பணி செய்து கொடுக்க வேண்டும், அணை – தொழிற்சாலை கட்டித் தர வேண்டும். அவற்றையெல்லாம் கூட விட்டுவிடுங்கள். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் அவசரம் அவசரமாக சட்டசபையைக் கட்டினாரே காலம் சென்ற கருணாநிதி அதன் திறப்பு விழாவை ஒட்டி தொழிலாளர்களுக்கு விருந்து- பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு வந்தவருக்கு ஒரு பெரிய உண்மை பொட்டில் அடித்தார் போல புலப்பட்டது. என்ன அது? தொழிலாளர்களில் 90 விழுக்காட்டினர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்!
ஆனால், இவ்வளவு பயன்களை பெற்றுக் கொண்ட மாநிலங்கள் அவர்களை அந்நியர்களாகவே பார்க்கும். அதுவும் மாநில கட்சிகள், மொழியை – ஜாதியை வைத்து பிழைப்பு நடத்தும் கட்சிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஏதாவது ஒரு சிறு பிரச்சினையென்றாலும் அவர்களைக் கண்டும் காணாமல் வேடிக்கை பார்க்கும். உபயோகப் படுத்திக் கொண்டு விட்டு கை கழுவி விடு (Use and Throw) என்பது தான் எழுதப் படாத விதி.
சரி போனது போகட்டும். இனிமேலாவது பாடங்களைக் கற்றுக் கொள்வோமா? முன்னரே சொன்னது போல, ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு நாடு முழுவதும் அமல் படுத்தப் பட வேண்டும்.
புலம் பெயரும் தொழிலாளர்கள் பற்றிய முழு விவரம்களும் மத்திய- மாநில அரசுகள் ஒருங்கிணைந்து தொகுக்க வேண்டும்.
நான்கைந்து ஆண்டுகள் முன்பாகவே துவக்கப் பட்ட ஸ்கில் இந்தியா திட்டத்தின் படி அவர்களுடைய திறமைகளின் அடிப்படையில் அவர்கள் வகைப் படுத்தப் பட்டு தர மேம்பாட்டுக்கு உதவலாம். அந்த வகையில் அவர்களின் ஊதியங்கள் உயரவும் வாழ்க்கை சீரடையவும் கூடும். குறைந்த பட்ச ஊதிய சட்டம் முறைப் படி அமுலாக்கப் பட வேண்டும்- கண்காணிக்கப் பட வேண்டும். காண்டிராக்டர்கள் வைத்ததே சட்டம் என்ற நிலை மாற வேண்டும்.
சேவா பாரதி ஏற்கனவே ஆங்காங்கே அத்தகைய தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், ஒழுக்கம் முதலிய நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களையும் இணைத்துக் கொண்டு விரிவு படுத்தலாம்.
நம் பிரதமர் முதல்வர்களிடம் இரண்டாவது முறையாக கலந்துரையாடும் முன்னர், இரண்டு வாரங்களுக்கு முன் அனுப்பிய கடிதத்தில் வரும் காலத்தில் நாம் முன்னுரிமை அளிக்க வேண்டிய 10 துறைகளை- திட்டப் பணிகளை பட்டியலிடும் படி அறிவுறுத்தி உள்ளதாகத் தெரிகிறது. அந்த பட்டியலில், புலம் பெயரும் தொழிலாளர்களின் நலம் பற்றியும் வலியுறுத்தப் படும் என்று எதிர் பார்ப்போம்.
இது ஒரே தேசம் என்று மனப் பூர்வமாக நம்பும்- செயல் படும் நம் பிரதமர் நிச்சயம் உரிய கவனம் செலுத்துவார் என்று நான் நம்புகிறேன்.
எம் ஆர் ஜம்புநாதன்