இளம்பெண்ணை குடும்பத்தினரே கொன்றனர்; மேலும் பல திடுக்கிடும் தகவலுடன் ஹத்ராஸ் சம்பவம்

உ.பி.,யின் ஹத்ராஸ் நகரில் 19 வயது இளம்பெண்ணை, அவரது குடும்பத்தினரே அடித்து கொன்று விட்டதாக , இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவர் போலீசுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஹத்ராஸ் நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், கடந்த 14ம் தேதி, 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தொடர்ந்து கடுமையாக தாக்கப்பட்ட அவர், டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக, 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவை முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்தார். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான சந்தீப் தாக்கூர் என்பவரை, இளம்பெண்ணின் குடும்பத்திற்கு தெரியும் என போலீசார் கூறியிருந்தனர். ஹத்ராஸ் போலீசுக்கு சிறையில் இருந்தபடியே சந்தீப் தாக்கூர் கடிதம் எழுதியுள்ளார். அதில் 4 பேரும் விரல் ரேகையை பதிவு செய்துள்ளனர். அந்த கடிதத்தில் சந்தீப் தாக்கூர் கூறியுள்ளதாவது  நானும், இளம்பெண்ணும் நண்பர்கள். நேரில் சந்தித்து கொள்வது மட்டுமல்லாமல், தொலைபேசி மூலமும் தினமும் பேசிக்கொள்வோம். ஆனால், எங்களது நட்பு, அவரின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. இளம்பெண் கொல்லப்பட்ட நாளன்று, வயலில் இருந்த அவரை சந்திக்க சென்றேன். அப்போது தாயாரும், சகோதரரும் அங்கு இருந்தனர். இதனால், என்னை திரும்பி செல்லும் படி அவர் கூறியதால், திரும்பி வந்துவிட்டேன்.

வீட்டில் கால்நடைகளுக்கு உணவு வைத்து கொண்டிருந்த போது, எங்களது நட்பை பிடிக்காத தாயாரும், சகோதரரும், இளம்பெண்ணை கடுமையாக தாக்கியதாகவும், அதில் அவர் படுகாயமடைந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். அந்த பெண்ணை நான் தாக்கியதும் இல்லை. தவறாக நடந்து கொண்டதும் இல்லை. இளம்பெண்ணின் தாயாரும், சகோதரரும் தவறாக எங்கள் மீது தவறாக குற்றம் சுமத்தி சிறைக்கு அனுப்பியுள்ளார். நாங்கள் அப்பாவிகள். இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி எங்களுக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.