உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான அரசின் இலவச சமஸ்கிருத கல்வி முயற்சியின் கீழ் கடந்த 3 மாதங்களில் 6,500 க்கும் மேற்பட்டோர் சமஸ்கிருதம் பேச கற்றுக்கொண்டுள்ளனர். மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், ‘சமஸ்கிருத நிறுவனத்தின் ‘மிஸ்டு கால்’ திட்டம் சமஸ்கிருதத்தின் மீதான மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கிறது. சமஸ்கிருதம் கற்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 3 மாதங்களில் முதல் நிலை சமஸ்கிருத மொழி கற்க 17,480 பேர் பதிவு செய்துள்ளனர். இதில், 6,434 பேர் தினமும் ஒரு மணி நேரம் என்று 132 ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வி கற்றனர். தொழிலதிபர்கள், மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைவரும் சமஸ்கிருதம் பேச, படிக்க இலவச பயிற்சி பெறலாம். உ.பியில் சமஸ்கிருதத்தை ஊக்குவிப்பதுடன் இதனைக் கற்க வெளிநாட்டினரை ஈர்க்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. மக்களுக்கு சமஸ்கிருதத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த பல நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. ஹிந்தி, ஆங்கிலத்துடன், சமஸ்கிருத மொழியில் ஒவ்வொரு குழந்தைக்கும் பயிற்சி அளிக்க நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன’ என தெரிவித்தார். சமஸ்கிருதத்தைப் படிக்க விரும்புவோருக்கு சமஸ்கிருத அறிவோடு தார்மீக மதிப்புகள் பற்றிய தகவல்களும் வழங்கப்படும் என்று உ.பி சமஸ்கிருத சன்ஸ்தானின் தலைவர் டாக்டர் வச்சஸ்பதி மிஸ்ரா கூறினார்.