உலகம் முழுவதிலும் 17.3 மில்லியன் மக்கள் பக்கவாதம், இருதய நோயினால் இறக்கிறார்கள் என்பதை மக்களுக்கு அறிவுறுத்த 2000ம் ஆண்டில் ‘உலக இருதய தினம்’ ஆரம்பிக்கப்பட்டது. இருதய தினம் கொண்டாடுவதன் நோக்கமே ஆரோக்கிய இருதயத்திற்கான சூழலை ஏற்படுத்துதல் என்பதற்காகத்தான். அதாவது வேலை செய்யும் இடம், வீட்டில் இருதய நோய்கள் பாதிப்பில்லாத ஆரோக்கிய சூழலை உருவாக்க வேண்டும்.
இருதய நோய் ஒரு ஆட்கொல்லி நோய். இதற்கு முக்கிய காரணமாக இன்றைய நவீன வாழ்க்கைமுறை, உணவுமுறைகள் அமைந்துவிட்டன. பதப்படுத்தப்பட்ட உணவுகள், உட்கார்ந்தே பணியாற்றும் சூழ்நிலை, அலைபேசி, இணையதளம் போன்றவற்றின் அதீத பயன்பாடுகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இருதய நோய் தற்காலத்தில் இளைய தலைமுறையினரைகூட அதிகம் முடக்குகிறது.
வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தத்தை குறைக்க, பணிகளை திட்டமிட்டு நேரத்துடன் செய்தல், ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேர வேலையை தவிர்த்தல், வேலை நமது மற்ற நேரங்களை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்வது, அலுவல் நேரத்தில் அவ்வப்போது சிறு நடை நல்லது.
வீட்டில் சமைத்த, ஆரோக்கியமான சமசீரான சுகாதாரமான உணவுமுறையை பின்பற்றுவதுடன் பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக இனிப்பு, குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகள் தவிர்த்தல், உப்பையும் சர்க்கரையையும் குறைத்து பயன்படுத்துதல், அதிக நார்ச்சத்து உள்ள உணவு, காய்கறிகள், பழங்கள், கொட்டைகளை எடுத்துக்கொள்ளுதல், உடலில் சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, கொழுப்பு அளவுகளை முறையாக பராமரித்தல், சுறுசுறுப்புடன் தோட்டவேலை, வீட்டு வேலை, நடனம், உடற்பயிற்சி, யோகா செய்தல், உடற் பருமனை கட்டுக்குள் வைத்தல், போதுமான நேரம் தூக்கம், ஓய்வு அவசியம் தேவை.
கட்டுப்பாடற்ற மனஅழுத்தம், கோபம், வருத்தம், பொறாமை போன்ற தீய குணங்களை விடுத்து நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ளுதல், தினம் தோறும் இறை வழிபாடு, தியானம் பழகுதல், நேர்மறை சிந்தனை, புகை, போதை பழக்கங்களை தவிர்ப்பது போன்றவை இருதயத்தை மட்டுமல்ல, முழுஉடலையும் மனத்தையும் பாதுகாக்கும். உடலும் மனமும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு உடையவை. நாம் செய்யும் சில நல்ல வாழ்க்கை முறை, உணவு முறை, மன மாற்றங்கள் நமக்கும் நம்மை சுற்றி உள்ளோருக்கும் மிகுந்த நன்மை பயக்கும்.