இன்றைய ஸ்வயம்சேவகர்களுக்கும் வழிகாட்டியாக திகழும் கவுண்டப்பன் ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர் சங்க தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, கவுண்டப்பன் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

திருப்பத்தூர் மாவட்டம் குட்டிகவுண்டனூர் கிராமத்தில் ஐயாகண்ணு கவுண்டர் – முனியம்மாள் தம்பதியினருக்கு 1940ம் ஆண்டு, மார்ச் மாதம் 7ம்தேதி பிறந்தவர், கவுண்டப்பன் ஜி. இந்த குடும்பத்தில் மூன்றாவது குழந்தையான இவருடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன், ஒரு அக்கா, ஒரு தங்கையுடன், மொத்தம் நான்கு குழந்தைகள். ஆரம்பக்கல்வியை திருப்பத்தூரில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் பயின்றார். அப்போது சென்னையில் இருந்த ஹண்ட்ரட் ஜி என்றழைக்கப்படும் சீனிவாசன் ஜி, திருப்பத்தூர் பள்ளிக்கு ஆசிரியராக வந்திருந்தார். குறிப்பாக அன்றைய வடஆற்காடு ஜில்லாவான திருப்பத்தூரில், சங்க வேலை இல்லாமல் இருந்தது. அந்த குறையைப் போக்க, சங்க பணியினை துவக்கும் நோக்குடனே திருப்பத்தூர் பள்ளிக்கு ஆசிரியராக சீனிவாசன் ஜி வந்திருந்தார்.

கவுண்டப்பன் ஜி படித்த பள்ளியில், ஹண்ட்ரட் ஜி சமூக அறிவியல் ஆசிரியராக இருந்தார். சங்க ஷாகாவை திருப்பத்தூரில் துவக்கினார். ஏராளமான மாணவர்கள் அந்த ஷாகாவில் இணைந்தனர். அவர்களில் கவுண்டப்பன் ஜியும் ஒருவர். சேலத்தை சேர்ந்த ராம்நாத் ஜி, ஜில்லா பிரச்சாரக்காக இருந்தார். அவர் மூலமாக 1963ல் திருச்சி பாப்பம்மாள் சத்திரத்தில் நடைபெற்ற சங்கத்தின் முதலாம் ஆண்டு சங்கப் பண்புப் பயிற்சி முகாம் சென்றார். அந்த முகாம் முடித்து வந்ததும், சங்க வேலைக்காக ஐந்து மாதம் விஸ்தாரக்காக இருந்தார்.

அதன் பின்னர், பி.யு.சி படிப்பை படித்து முடித்த போது, விஜயபாரதத்தின் ஆசிரியராக இருந்த சுப்பாராவ் ஜி, கவுண்டப்பன் ஜிக்கு கடிதம் எழுதினார். அதில், சென்னையில் விஜயபாரதம் அலுவலகத்தில் பணி உள்ளது, வந்து சேரவும் என இருந்தது. அவரது வீட்டில் வேலைக்கு போ என அனுப்பினர். சென்னையில் சிம்சன் அருகில் உள்ள சிந்தாதரிபேட்டையில் இருந்த விஜயபாரதம் அலுவலகத்தில் தங்கி, சர்குலேஷன், சந்தா சேகரிக்கும் பணிகளை கவனித்து வந்தார். பிரச்சாரக்காக இருங்கள் என சங்க அதிகாரிகள் சொன்னதன் பேரில், முழுநேர ஊழியராக வேலை செய்தார். அப்போது மகாநகர் பிரச்சாரக்காக சிவராம் ஜி இருந்தார்.

தி.நகரில் உள்ள சிவா-விஷ்ணு கோயில் அருகே உள்ள பார்க்கில் சாயம் ஷாகா ஆரம்பித்தார். அந்த சமயம் பரமபூஜனிய குருஜி சுற்றுப்பயணத்தின் போது, சென்னைக்கு வந்துவிட்டு வேறு ஊருக்கு பயணம் செல்கையில், சிலமணி நேர ஓய்வுக்குப் பின்னர், சங்க ப்ரார்த்தனைக்கு ஏதாவது ஷாகா செல்ல வேண்டும் என்ற போது கவுண்டப்பன் ஜி கவனித்து வந்த ஷாகாவுக்கு வந்தார்.

1967ல், மூன்றாம் ஆண்டு சங்கப் பண்புப் பயிற்சி முகாம் முடிக்க சேலம் ஜவஹர் ஜி, உத்தம்ராஜ் ஜி, கதிர்வேலு ஜி ஆகியோருடன் இணைந்து நாகபுரிக்கு சென்றார். 1967ம் ஆண்டு வட ஆற்காடு, திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஜில்லா பகுதியில் பிரச்சாரக் பணி செய்தார்.
வேலூரில் வீரபாகு ஜி பிரசாரக்காக இருந்த போது, வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் சிலை பிரதிஷ்டை கலெக்டர் கங்கப்பாவின் மறைமுக உதவியுடன் நடந்தேறியது. அதில் உள்ளூர் முக்கியப் பிரமுகர்கள், ஸ்வயம்சேவகர்களின் பணி, திட்டமிட்ட ரீதியில் மிக சிறப்பாக அமைந்திருந்தது.

1971ல் குருஜியின் சுற்றுப்பயணம் ஜில்லா கேந்திரங்களில் நடைபெற்றது. அப்போது வேலூர் விபாக்கில் புது முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதல் நாள் காஞ்சிபுரத்தில் கலந்து கொள்ளும் அனைவரும், வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, சங்க தொப்பியுடன் கலந்து கொள்ள வேண்டும். நிகழ்ச்சி மாலை சரியாக ஐந்து மணி என்றால், 4,59 மணி வரையில் மட்டுமே அனுமதி, அதற்கு பின்னர் ஐந்து மணிக்கு வந்தால் கூட, அனுமதி இல்லை. அவர்கள் திரும்பி போய்விட வேண்டியதுதான். இப்படி கடுமையான நடைமுறையுடன் நடந்த பௌத்திக் மிக சிறப்பாக நடந்தது. அடுத்த நாள் நிகழ்ச்சி வேலூரில். அங்கு செல்ல இரண்டு கார் ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் காரில் பரமபூஜனிய குருஜியுடன் பயணம் செய்தார், கவுண்டப்பன் ஜி.

எமர்ஜென்சியின் போது தலைமறைவாக பல இடங்களுக்கு சென்று விட்டு, இரவு கார்யாலயத்தில் வந்து தங்கிய போது, போலீசார் கைது செய்தனர். முதலில் 15 நாட்கள் டி.ஐ.ஆர் சட்டத்தில் கைது என்றனர், பின்னர் மிசாவில் கைது என்றனர். 20 மாதம் 15 நாட்கள் சிறையில் இருந்து விட்டு விடுதலையானார். எமர்ஜென்சிக்கு பின்னர் இரண்டாண்டுகள் வேலூர் ஜில்லா கார்யவாஹ்காக இருந்தார். டாடா காபி கம்பெனியில் சூப்பர்வைசராக பணி புரிந்தார்.

1979ல் வாணியம்பாடியில் உள்ள அவரது உறவினர் மகள் கிருஷ்ணவேனியுடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், இரு பெண் குழந்தையும் பிறந்தனர். மகன் காபி தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து விட்டு, தற்போது காபி நிறுவனம் ஒன்றை தொடங்க முயற்சித்து வருகிறார், அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பெண்கள் இருவரும் திருமணமாகி குழந்தைகளுடன் உள்ளனர். இளைய மகள் பிஸியோதெரபி முடித்து விட்டு, சென்னை வில்லிவாக்கத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.

14 வருடம் பிரச்சாரக், பின்னர் நான்காண்டுகள் விசுவ ஹிந்து பரிஷத்திலும் இருந்து விட்டு, வீட்டுக்கு சென்ற பிறகு ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, திருப்பத்துர் பகுதியில் சங்கப் பணிகள். இந்த பகுதிகளில் நமது பள்ளிகளும் ஏற்படுத்தப்பட்டன. இவரது வீட்டுக்கு இராம கோபாலன் ஜி, வீரபாகு ஜி, சண்முகநாதன் ஜி, ஜோதி ஜி உள்ளிட்ட சங்க அதிகாரிகள் வந்து தங்கி சாப்பிட்டு விட்டு சென்றிருக்கிறார்கள். தற்போது 86 வயதிலும், சங்க நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொள்கிறார். குருஜி நூற்றாண்டின் போது, நாகபுரியில் நடைபெற்ற பழைய பிரச்சாரகர் சந்திப்பு நிகழ்விலும் கலந்து கொண்டிருக்கிறார்.

முதிய வயதிலும், தற்போதைய இளைய தலைமுறை ஸ்வயம்சேவகர்களுக்கு வழிகாட்டியாக திகழும் கவுண்டப்பன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.