இந்த டாக்டர் தம்பதிக்கு வனமே கோயில், வனவாசியே தெய்வம்!

டாக்டர் ரவீந்திர கோலே – ஸ்மிதா தம்பதிக்கு மஹாராஷ்ட்ரா மாநிலம் அமராவதி மாவட்டம் மேலகட் பகுதியில் வாழும் பழங்குடிகளின் நலவாழ்வு தான் குறிக்கோள். சமீபத்தில் சென்னை வந்திருந்த டாக்டர் கோலேவை நமது செய்தியாளர் கிருஷ்ணமூர்த்தி சந்தித்தார். நேர்காணலிலிருந்து:

 

 மேலகட் (Melghat) போன்ற கிராமங்களில் வாழும் பழங்குடியினரின் மேம்பாட்டில் நீங்கள் காட்டி வரும் அக்கறையின் பின்னணி என்ன ?

வறுமை. அது தொடர்பான  பசிப்பிணி, மனரீதியாக வெறுப்புற்று தற்கொலையில் ஈடுபடுதல், குழந்தைகளுக்கு மிக குறைந்தபட்ச அளவு  கூட கிடைக்காத சத்துணவு பொருட்கள், இப்படி பல இன்னல்களை அங்குள்ள கல்வி அறிவற்ற மக்கள் தினசரி சந்தித்ததை கண்ட எனது கண்கள் குளமாயின. தொடக்க நிலை மருத்துவ உதவி தந்திடும் அதே சமயம்,  அவர்களுக்கு ஊட்டமிகு சத்துணவு போன்ற அடிப்படை பொருட்களை எப்படி கொண்டு செல்வது, மலைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை எப்படி முன்னேற்றுவது, வீணே கிடக்கும் நிலங்களில் எப்படி பயிர் செய்வது, எப்படி அவர்களை முன்னேற்றுவது என்பதான் என்னுடைய சிந்தனை.

மேலகாட்டில் (1987) நீங்கள் அடியெடுத்து வைத்தபோது அங்குள்ள நிலைமை எப்படி இருந்தது?

இந்தியாவில் நல்ல உணவு கிடைக்காமல் ஊட்டச்சத்து இல்லாமல் இறக்கும் சிறார் எண்ணிக்கை அதிகம் உள்ள கிராமங்களில்,  317 கிராமங்களை உள்ளடக்கிய மேலகட் வட்டாரமும் ஒன்று.  சத்துணவு கிடைக்காத காரணங்களாலேயே, அக்காலகட்டத்தில்,  அந்த ஊர் சிறார் இறப்பு என்பது 1,000க்கு 200 பேராக இருந்தது. கருவுற்றிருந்த பெண்களின் உடல் நிலையோ கேட்கவே வேண்டாம். மருத்துவமனை போகவேண்டுமானால், நகரத்துக்குள் வர வேண்டும். போக்குவரத்து வசதிகளோ மிகவும் குறைவு.

மருத்துவப்படிப்பு மேற்கொண்டிருக்கும் போதே, இந்தியாவில் அடிப்படை வசதி ஏதும் இல்லாத வறுமைப்பிடியில் தவிக்கும் மக்களுக்கு என்னால் இயன்ற மருத்துவ உதவிகள் செய்து பல சவுகரியங்களோடு வாழும் இதர மக்களைப்போல் இவர்களையும் சமூக, பொருளாதார, நீரோட்டத்தில் இணைக்கவும் அம்மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் உறுதி பூண்டேன். அந்த எண்ணமே என்னை மேலகட் பகுதியில் உள்ள பைரகட் கிராமத்து  மக்களிடம்  கொண்டு வந்து பணிபுரிய வைத்தது.

பழங்குடியினரின் நலவாழ்வே பிரதானம் என்று நினைத்து விட்ட நீங்கள் திருமண வாழ்வு பற்றி சிந்தித்ததில்லையா?

அப்போதெல்லாம் ஒரு நோயாளியிடம் ஒரு ரூபா கட்டணமாக வசூலிப்பேன். சில நேரங்களில் அவசர சிகிச்சை நிமித்தம்   நடு இரவுகளில் கூட என் வீட்டுக் கதவை  தட்டுவார்கள். அப்போதெல்லாம் அவர்களிடம் பணம் கூட வாங்க மாட்டேன். ஒரு மாதத்துக்கு 400 நோயாளிகள் வருகிறார்கள் என்றார்கள் என்றால் எனது மாத வருமானம் 400 ரூபா. டாக்டர் ஆயிற்றே… எளிதாக பெண் கிடைத்துவிடும் என்று கற்பனை செய்யாதீர்கள். நானும் சில நிபந்தனைகளை போட்டதால் சுமார் நூறு பெண்களாவது  என்னை நிராகரித்திருப்பார்கள். நான்  போட்ட நிபந்தனைகள் என்னென்னென்ன தெரியுமா?  பைராகட் செல்ல சுமார் 40 கிலோமீட்டர் நடக்க வேண்டும், 400 ரூபாக்குள் குடும்பம் நடத்த சம்மதிக்க வேண்டும், சமுதாய அக்கறையில் மக்களுக்கு சில  வசதிகள் செய்ய பணம் தேவை இருப்பதால்   சில நேரங்களில் பிச்சை எடுக்கக்கூட தயாராயிருக்க வேண்டும் போன்றவையே அத்தகைய நிபந்தனைகள். இத்தனை நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்ட டாக்டர் ஸ்மிதா என் மனைவியாக கிடைத்தது நான் செய்த புண்ணியம். பழங்குடி மக்கள் வாழும் இடங்கள் பலவற்றில் விளைநிலங்கள் பல  மேம்பாடு காணப்படாமல்  தேவையற்ற தாவரங்கள்  வளர்ந்து சுற்று சூழலை மாசு  படுத்துவது பற்றி..இங்குள்ள கிராமங்களில் வாழும் பழங்குடியினர்களில் சுமார்  50 விழுக்காடுக்கு மேல் சொந்த நிலம் உள்ளவர்கள். விளைநிலங்களில்  அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் தாவர உரங்கள் போன்றவற்றை தேவையான அளவு போட்டு மேம்பாடு செய்திட்டாலே தானிய வகைகள், காய்கறிகள், பருத்தி, மஞ்சள்  போன்றவற்றை நாமே வளர்க்கலாம். எங்கள் நிலங்களில் எப்படி பயறு வகைகள் போன்றவற்றை வளர்க்கிறோம் போன்ற பயிற்சிகளை இங்குள்ள மக்களுக்கு செயல்விளக்கம் மூலம் கற்பித்தோம். அவர்களும் ஆவலோடு பயின்றார்கள். ‘அடுத்த வேளையானால் வயிறு பசிக்குமே’ எனவே ஆர்வத்தோடு கற்றார்கள். மக்களும்   பற்பல பயிர்களை விளைவிக்கிறார்கள். தொடக்க காலத்தில் ஒன்றுமே இல்லாமல் இருந்ததற்கு மாற்றாக தற்போது பற்பல தானியங்கள், சோயாபீன்ஸ், உருளை,  பச்சைப்பயறு, கோதுமை, கரும்பு, அரிசி, மாம்பழம், தர்பூசணி போன்றவற்றை வளர்த்து வர்த்தகம் செய்கிறோம். 1985ல் விவசாயம் மூலமாக ஏக்கர் ஒன்றுக்கு ஒரு குவிண்டால் தானியம் உற்பத்தியானது. இப்போதோ, ஏக்கர் ஒன்றுக்கு 5 முதல் 8 குவிண்டால்கள் வரை விளைகிறது. இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், சுய தேவைக்கான உணவு பொருட்கள் கிடைப்பதோடு, விவசாய  தொழிலை கற்றுக்கொண்டு அதன் மூலம் உற்பத்தி செய்து, கிராமங்களில் வாழும் அனைவரும் குறைந்த பட்ச உணவுத்தேவையை பூர்த்திசெய்ய கற்றுக்கொண்டு விட்டார்கள்.

தானியங்கள், காய்கறிகளின் வளர்ச்சி என்றால் பாசன வசதி எப்படி?

நீர் ஆதாரங்களை பெருக்கும் முயற்சியில், கடந்த 33 வருடங்களாக பல நீர் சேகரிப்பு உத்திகளை உருவாக்கியுள்ளோம். நில, நீர்  மேலாண்மை திட்டத்தின் படி, அங்கங்கே தடுப்புக்கள் உருவாக்கி, மழை நீரை சேகரிக்கிறோம். நீர் ஆதாரங்கள் பெருகி வருகின்றன. அரசின் NREGA திடங்களின் மூலம் இவற்றிற்கான நிதி வசதிகள் அவ்வப்போது  பெறப்பட்டு,  நீர் ஆதாரங்களின் இருப்பும் வளமையும் உறுதி செய்யப்படுகின்றன.

 உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்கள்.

எங்களுக்கு ரோஹித், ராம்  என்று இரண்டு மகன்கள். இதுவரை நாங்கள் காட்டில் பழங்குடியினருக்கிடையே காலத்தை கழிக்கிறோம் என்கின்ற புகாரோ, எங்களுக்கு நகர வாழ்க்கை போன்ற சுக வாழ்க்கையை கொடுக்கவில்லையே என்கின்ற புகாரோ  எதுவும் அவர்கள் கூறவில்லை. சொல்லப்போனால், மேலகட்டிலேயே விவசாயப்பணியியல் ஈடுபடுத்திக்கொள்கிறான் இளையமகன் ரோஹித். மூத்த மகன் ராம் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறான்.

 பழங்குடியினர் மேம்பாட்டில் நீங்கள் சந்தித்த தொடக்க கால இன்னல்கள் பற்றி

தொடக்க காலத்தில்  பிரசவ கேஸ்களில் (ஊட்டச்சத்து இன்மை, இன்ன பிற காரணங்களால்) சிசு இறக்கும் பட்சத்தில், போலீஸ் எங்களை 304 , 304 (எ) சட்டத்தின் கீழ் கைது செய்வோம் என்றெல்லாம் மிரட்டியதுண்டு. மக்கள் பணியில் நாங்கள் இருக்கிறோம் என்கின்ற நல்லெண்ணத்தில்,  பழங்குடியினரின் தயாள குணம், உயர் அதிகாரிகளின் உதவி போன்றவற்றால் இத்தகைய புகார், கைது ஆகியவற்றிலிருந்து தப்பித்தோம்.

படித்து முடித்த இளம் மருத்துவர்களுக்கு தங்கள் அறிவுரை:

நகர்ப்புறங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், தீபாவளி போன்ற திருவிழா தருணங்களில், வருடத்திற்கொரு முறையாவது எங்களது மேலகட் போன்ற பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்கு விஜயம் செய்து  இங்குள்ளோருக்கு சில வாரங்கள் மருத்துவம் செய்யுங்கள். நிறைய முகாம்களில் கலந்துகொண்டு மக்களுக்கு மருத்துவர்கள் மேல்  நம்பிக்கை உருவாக்குங்கள்,  கேட்ராக்ட் போன்ற அறுவை சிகிச்சை போன்றவற்றை நடத்த உறுதுணையா இருங்கள், ஊட்டச்சத்து குறைபாடே சிறார் மத்தியில் நிலவக்கூடாது என்ற உறுதியுடன் பணியில் உதவுங்கள்.

அரசு போன்ற பணியிலிருந்து ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு பெரும்பாலும் வங்கிக் கடன் நிலுவை போன்ற தொல்லைகள் அவ்வளவாக இருக்காது. பொறுப்புக்கள் சற்றே குறைந்த அத்தருணத்தில், அவர்கள்  இங்கு வந்து சிறிய அளவிலேனும் மருத்துவப்பணி செய்வது நல்லது.