உலகை உயர்த்தும் பண்பாடு நமதே!”

பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் என்று அழைக்கப்படும் மும்பை பங்குச் சந்தையில் தேசத்தின் முன்னணி வர்த்தகர்களிடையே ஏப்ரல் 16 அன்று ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத் நிகழ்த்திய பேருரையிலிருந்து சுவையான சம்பவங்களின் தொகுப்பு இது.

சீனா சென்று வந்த ஒரு பத்திரிகையாளர் என்னிடம் தெரிவித்த தகவல் இது: ‘சீனாவில் ஒரு ஷிண்டோ பௌத்த ஆலயம் சென்றேன். ஒரு சீனப் பெண்மணி வழிபாடு செய்து கொண்டிருந்தார். அவர் என்னைப் பார்த்ததும் பாரதத்திலிருந்து வருகிறீர்களா என்று கேட்டார். ஆம் என்றேன். உடனே இடுப்பு வரை வளைந்து என்னை வணங்கினார். அம்மா நீங்கள் என்னை விட மூத்தவர் ஆயிற்றே, என்னை ஏன் வணங்கினீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், உங்கள் நாடு மகத்தானது. எங்களுக்கு எப்படி வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த நாடல்லவா பாரதம்?’ என்றார்.

துபையில் பல தேசங்களின் அதிபர்கள் கூட்டம் (சம்மிட்) நடந்தது. அதற்கு பாரதத்திலிருந்து சென்ற குழுவில் இடம்பெற்றிருந்த அமைச்சர் இந்த அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார்: சவூதி ஆட்சியாளர்கள் பாரதத்திலிருந்துசென்ற எங்களை தனியாக சந்தித்து, ‘மற்ற நாடுகள் எங்களிடமிருந்து வணிக ஆதாயம் பெற மல்லுக்கட்டுவார்கள், நாங்களும் அதுபோல அவர்களிடம் ஆதாயம் பெற அனைத்தும் செய்வோம். ஆனால் பாரதத்துடன் எங்கள் உறவு அப்படியல்ல. பாரதம் நியாயமாக நடந்து கொள்ளும் என்று எங்களுக்குத் தெரியும். எனவே சவூதிக்கும் பாரதத்திற்கும் பிரச்சினை இல்லை’ என்றார்கள். உலகம் பாரதத்தின் பண்புகளுக்காகப் போற்றுகிறது. வல்லவன் வைத்ததே சட்டம் என்ற ஐரோப்பிய கலாச்சாரத்திற்கு மாறாக, அனைவரும் நலம்பெற வேண்டும் என்பதுதான் நமக்கு உலகில் மதிப்புத் தேடித்தந்துள்ள கலாச்சாரம்.

நான் சிறுவனாக இருக்கும்போது என் அம்மாவுடன் வங்கிக்கு ஒருமுறை போயிருந்தேன். அங்கு ஒருவர் வந்தார். அழுக்கேறிய வேட்டி, பனியன். வாயில் புகையும் பீடி. பத்து லட்சம் ரூபா டெபாசிட் செதுய்விட்டுப் போனார். நாகபுரியில் அறப்பணிகள் நிறைய செய்து வந்த பாலாஜி சாஹுகார் என்ற செல்வந்தர் தான் அவர். அவரிடம் செல்வம் கொழித்தது. ஆனால் அது பிறருக்கு உதவுவதற்காக என்று அவருக்கு மனதில் பதிந்திருந்தது. அதுதான் நமது கலாச்சாரம்.

முரளி மனோகர் ஜோஷி (ஒரு முன்னாள் அமைச்சர்) சீனா சென்றிருந்த போது மங்கோலியா, ரஷ்யா, சீனா என்று பல நாடுகளின் எல்லைகள் சேரும் பகுதியில் இருந்த சீன அணையைப் பார்வையிட்டார். அங்கே பாதுகாப்பு படையினர் எவரும் இல்லை. சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். இது அணையின் பாதுகாப்புக்கு ஆபத்தல்லவா என்று கேட்டதற்கு அங்கிருந்த சீன அதிகாரி, எங்கள் அணையைத் தாக்கும் தைரியம் யாருக்கும் கிடையாது என்று பதிலளித்தாராம். அத்தகைய அஞ்சா நெஞ்சம் பாரதத்திற்கும் தேவை. நமது பண்பாட்டை உலகம் தலைவணங்கி ஏற்கிறபோது, நம்மை தவறான எண்ணத்துடன் ஏறிட்டுப் பார்க்கும் தைரியம் யாருக்கும் ஏற்படக்கூடாது.

1) ஜார்க்கண்ட் வனவாசி அன்பர்கள் நாலு பேர் நாகபுரி வந்து தரமான ஸ்டீல் தயாரித்துக் காட்டினார்கள். பெரிதாக தளவாடங்கள் இல்லை.

2) சுமார் 8,000 ஆண்டுகளாக பாரத விவசாயிகள் சாகுபடி செய்கிறார்கள். பூமி வளம் குன்றவில்லை. ஆனால் ஆப்பிரிக்காவின் நிலப்பரப்பைக் கைப்பற்றிய ஐரோப்பியர்கள் 400 ஆண்டுகள் விவசாயம் செய்ததில் அங்கு நிலம் மலடாகிவிட்டது. 10 ஆண்டுகள் வரை சாகுபடி செய்யாமல் இடைவெளி விடவேண்டியிருந்தது.

3) டாக்கா மஸ்லின் துணி நெய்த பாரத நெசவாளரின் திறன் அபாரம். அவர்கள் நூற்ற நூலின் அளவுக்கு மெலிதாக இன்று கம்ப்யூட்டர் மயமான இயந்திரம் கூட உற்பத்தி செய்யமுடியவில்லை.

4) நிலத்தை வாங்கிய விவசாயி உழுதபோது புதையல் கிடைத்தது; அதை நிலம் விற்றவரிடம் கொடுத்தார்; அவர் வாங்க மறுத்தார். அரசரும் அதை கையகப்படுத்த மறுத்தார். இந்தக் கதையைக் கேட்டிருப்போம். செல்வத்தைப் பற்றிய பாரதிய பார்வை இதுதான். பாரதத்திற்கு உலகில் புகழ் சேர்ப்பது நமது இந்தப் பண்பு தான். நமது கலாச்சார பலத்தால் உலகின் போக்கை உன்னதப் பாதைக்குத் திருப்புவோம்.