இந்து மத நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதி செய்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பார் நகரில் நேற்று  நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது: இந்து மத நம்பிக்கையை ஒழிக்ககாங்கிரஸ் சதியில் ஈடுபட்டுள்ளது. இட ஒதுக்கீடு மற்றும் அரசியலமைப்பு குறித்த பாஜகவின் நிலைப்பாட்டை காங்கிரஸ் திரித்துப் பொய் பரப்புரை செய்து வருகிறது.

மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்குதல் என்பது டாக்டர்பாபாசாகேப் அம்பேத்கரின் நோக்கத்திற்கும் இந்திய அரசியலமைப்பின் மதிப்பீடுகள் மற்றும் கொள்கைகளுக்கும் எதிரானது. உங்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்குக் கொடுப்பதே காங்கிரஸ் கொண்டிருக்கும் சதி திட்டமாகும். இப்படித்தான் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்குள் முஸ்லிம்களை இரவோடு இரவாக சேர்த்துவிட்டது. மாறாக, பழங்குடியின மக்களின் நன்மை குறித்த எந்தவித அக்கறையும்காங்கிரஸுக்கு இதுவரை இருந்ததில்லை. இவ்வாறு பிரதமர் கூறினார்.