பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:
இது வெறும் இடைக்கால பட்ஜெட் அல்ல; நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பட்ஜெட். இது, வரும் 2047-க்குள் வளர்ந்த இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான உத்தரவாதமாக உள்ளது.
இந்த பட்ஜெட், வளர்ந்த இந்தியாவின் நான்கு துாண்களான இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகள் ஆகியோருக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் உள்ளது. மேலும், இளம் இந்தியாவின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது. நாட்டில் ஏற்கனவே நான்கு கோடிக்கும் அதிகமான வீடுகள் ஏழை மக்களுக்கு கட்டப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட்டில் மேலும் 2 கோடி வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்க இலக்கு வைத்துள்ளோம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிகாரம் அளிப்பது, அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து, இந்த பட்ஜெட் வலியுறுத்துகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துகள். நாங்கள் ஒரு பெரிய இலக்கை நிர்ணயிக்கிறோம்; அதை அடைகிறோம். பின்னர் இன்னும் பெரிய இலக்கை நமக்காக நிர்ணயிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.