இடிக்கப்பட்ட பயங்கரவாதியின் வீடு

ஜம்மு காஷ்மீர் மாநில அரசு நிர்வாகம், பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தளபதிகளின் ஒருவரான அமீர் கானின் சட்டவிரோத வீட்டை இடித்துத் தள்ளியது. குலாம் நபி கான் என்கிற அமீர் கான் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வந்தார். 1990களின் முற்பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அவர் ஒரு செயல்பாட்டு தளபதியாக இருந்தார். அனந்த்நாக் மாவட்டத்தின் லீவர் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தில் கட்டப்பட்டு இருந்த அந்த பயங்கரவாதியின் வீட்டை ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் கூட்டு நடவடிக்கைக் குழு, ஒரு நீதிபதியின் முன்னிலையில் புல்டோசர்களை கொண்டு இடித்துத் தள்ளியது. ஜம்மு காஷ்மீர் பகுதியை பயங்கரவாதம் இல்லாததாக மாற்றவும், அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், புல்வாமா மாவட்டத்தில் உள்ள ராஜ்போராவில் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த மற்றொரு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி ஆஷிக் நெங்ரூவின் சட்டவிரோத வீடு இடித்துத் தள்ளப்பட்டது நினைவு கூரத்தக்கது.