ஆவேசம்! சட்டசபையில் தி.மு.க.,வை உரித்தெடுத்து பேச்சு – முதல்வர்

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விவாதத்தில், சட்டசபையில், நேற்று ஆவேச பதிலளித்த முதல்வர், தி.மு.க.,வை உரித்தெடுத்தார். ”குடியுரிமை திருத்த சட்டத்தால், யாராவது ஒருத்தருக்காவது பாதிப்பு ஏற்பட்டதா என சொல்லுங்கள்,” என, சவால் விட்டதுடன், ”இந்த விவகாரத்தில், உங்களை போல நாங்கள் நடிக்கவில்லை; நாடகமாடவில்லை,” என்றும், தி.மு.க.,வை கடுமையாக சாடினார்.

தி.மு.க., – மனோ தங்க ராஜ்:

தமிழக அரசின் கடன், 4.56 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால், கட்டுக்குள் உள்ளதாக, துணை முதல்வர் கூறுகிறார். சர்க்கரை நோய் இருப்பதாக தெரிந்தால், உச்ச வரம்புக்குள் தான் உள்ளது என அமைதியாக இருக்காமல், சர்க்கரை அளவை குறைக்க, சிகிச்சை மேற்கொள்வோம். அதேபோல, கடன் சுமையை குறைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில வருவாயில், 13 சதவீதம் மட்டுமே, முதலீட்டிற்கு செலவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு, நம்மை வஞ்சிக்கிறது என்பதை, தொடர்ந்து கூறி வருகிறோம். அது, பட்ஜெட்டிலும் தெரிவிக்கப் பட்டு உள்ளது. மத்திய அரசு, 30 ஆயிரம் கோடி ரூபாய், நிலுவைத்தொகை தர வேண்டியுள்ளது. அதேபோல, மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்காக வழங்கிய, 28 ஆயிரத்து, 179 கோடி ரூபாய், திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. மத்திய அரசு என்ன தவறு செய்தாலும், அமைதியாக இருக்கிறீர்கள்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:

மத்திய அரசில், தி.மு.க., இடம் பெற்றிருந்த போதும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, அரசிதழில் வெளியிட, நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெ., சட்டப் போராட்டம் நடத்தி, வெளியிடச் செய்தார். மத்திய அரசில், 16 ஆண்டுகள் இடம் பெற்றிருந்தும், தமிழகத்திற்கு எதை கேட்டு பெற்றீர்கள்?

தி.மு.க., கூட்டணி அரசு, மத்தியில் இருந்த போது தான், மாநில பட்டியலில் இருந்த கல்வி, மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்டது.நாங்கள், தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை எதிர்க்கிறோம். மத்திய அரசுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம்.

தி.மு.க., – சக்கரபாணி:

மாநில பட்டியலில் இருந்து, மத்திய பட்டியலுக்கு, கல்வி மாற்றப்பட்ட போது, தி.மு.க., ஆட்சியில் இல்லை. ‘நீட்’ தேர்வுக்காக, இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றினீர்கள்; உச்ச நீதிமன்றம் சென்றுள்ளீர்கள்; ஆனால், ‘நீட்’ தேர்வை எதிர்க்கவில்லை. தேசிய வங்கிகளில், விவசாய கடனுக்கான வட்டியை, மத்திய அரசு, 3 சதவீதத்தில் இருந்து, 8 சதவீதமாக உயர்த்தி உள்ளது. அதை, தட்டி கேட்க முடியவில்லை.

முதல்வர்:

உங்கள் எம்.பி.,க்களை, குரல் கொடுக்க சொல்லுங்கள்; இங்கு பேசி பிரயோஜனமில்லை. இங்கு பேசினால், நாங்கள் கேட்கத் தான் முடியும்; அங்கு பேசுங்கள்.

சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்:

நீங்கள் மத்திய அரசில் இடம் பெற்றிருந்த போது தான், ‘நீட்’ தேர்வு கொண்டு வரப்பட்டது. இது குறித்து பேச, உங்களுக்கு உரிமை இல்லை. அதேபோல், ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை கொண்டு வந்ததும் தி.மு.க., ஆட்சியில் தான். இது தொடர்பாக, டி.ஆர்.பாலு அளித்த பேட்டி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

முதல்வர்:

ஐந்து ஆண்டுகள், மத்திய அமைச்சரவையில், பதவி சுகத்தை அனுபவித்தது நீங்கள். நாங்கள், அமைச்சரவையில் இடம்பெறவில்லை. ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும், இலாகா இல்லாத மத்திய அமைச்சராக இருந்தார்.

மனோதங்கராஜ்:

மத்திய அரசை பகைத்துக் கொள்ள விரும்பாததால் தான், இந்திய குடியுரிமை திருத்த சட்டத் திற்கு எதிராக, தீர்மானம் கொண்டு வர மறுக்கிறீர்கள்.

முதல்வர்:

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தால், யார் பாதிக்கப்பட்டுள்ளார்; பாதிக்கப்பட்டவர் யாராவது ஒருவர் இருந்தால் கூறுங்கள். தவறான தகவல்களை கூறி, அமைதியாக வாழும் மக்களிடம், பிரச்னைகளை ஏற்படுத்துகிறீர்கள்.

மனோதங்கராஜ்:

பாதிப்பு இருப்பதால் தான், பல மாநிலங்களில், அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

முதல்வர்:

அதுபற்றி, மத்திய அரசு முடிவு செய்யும். நாங்கள், உங்களைப் போல நடிக்கவில்லை; நாடகமாடவும் இல்லை. இவ்வாறு, விவாதம் நடந்தது.

ஐ.பி., அதிகாரிகள் ரகசிய விசாரணை

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, மர்ம நபர்கள் மற்றும் சில கட்சிகள், போராட்டத்தை துாண்டி வருவதை, போலீசார் கண்டறிந்து உள்ளனர். இந்நிலையில், சென்னை, வண்ணாரப்பேட்டையில், ஆறாவது நாளாக, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, போராட்டம் தொடர்கிறது. இதன் பின்னணியில், முக்கிய புள்ளிகள் இருப்பதாகவும், அவர்கள் பண உதவி செய்து வருவதாகவும், போலீசார் தெரிவிக்கின்றனர்.

அவர்கள், தமிழகத்தின் பல பகுதிகளில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இடங்களில், போராட்டத்தை துாண்டி விடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், போலீசார் தெரிவிக்கின்றனர். போராட்டத்தை கட்டுப்படுத்த, கூடுதல் டி.ஜி.பி.,க்கள் உட்பட, 12 பேர், சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்த முக்கிய புள்ளிகள் யார்; அவர்களுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது; அவர்கள், சமூக விரோத கும்பலைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து, ஐ.பி., என்ற, மத்திய உளவு போலீஸ் அதிகாரிகள், 10 பேர், சென்னையில் முகாமிட்டு, விசாரித்து வருகின்றனர். அந்த முக்கிய புள்ளிகள் மீது, விரைவில் சட்ட நடவடிக்கை பாயும் என, எதிர்பார்க்கப்படுகிறது.