அஜ்மல் கசாப்பை ஹிந்துவாக சித்தரிக்க முயன்ற பாகிஸ்தான் – பயங்கரவாதிகள் மும்பை தாக்குதல் குறித்து ‘பகீர்’ தகவல்

‘மும்பையில் 2008 நவ. 26ம் தேதி பாக். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை ‘ஹிந்து பயங்கரவாதம்’ என முத்திரை குத்த முயற்சி நடந்தது.பயங்கரவாதி அஜ்மல் கசாப் வலது கையில் காவி நிற கயிறு கட்டிஹிந்து என சித்தரிக்க முயற்சி நடந்தது’ என்ற அதிர்ச்சி தகவலை மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா தனது புத்தகத்தில் தெரிவித்துஉள்ளார்.

மும்பை போலீஸ் கமிஷனராக இருந்தவர் ராகேஷ் மரியா. இவர் ‘லட் மீ சே இட் நவ்’ (நான் இப்போது சொல்லட்டுமா) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் போலீஸ் அதிகாரியாக இருந்தபோது நடந்த சம்பவங்களையும் வெளிச்சத்துக்கு வராத புதிய தகவல்களையும் புத்தகத்தில் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதில் கடந்த 2008ம் ஆண்டு நவ. 26ம் தேதி பாக். ஆதரவு பெற்ற ‘லஷ்கர்-இ-தொய்பா’ பயங்கர வாத இயக்கத்தினர் மும்பையில் நடத்திய தாக்குதல் குறித்து குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதலில் 166பேர் கொல்லப்பட்டனர்.

கையில் காவி கயிறு

தற்போது பாக்.,சிறையில் உள்ள சர்வதேச பயங்கரவாதி ஹபிஸ்சயீது தான் இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்தார் என விசாரணையில் தெரியவந்தது. ஒரு வேளை ‘லஷ்கர் – இ – தொய்பா’ பங்கு குறித்து புலன் விசாரணையில் உண்மை தெரியாமல் இருந்தால் இது ஓர் ‘ஹிந்து பயங்கரவாத செயல்’ என முத்திரை குத்தவும் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனர் என ராகேஷ் மரியா புத்தகத்தில் விவரித்துள்ளார்.

அதற்கு முன்னோட்டமாக தான் பயங்கரவாதி அஜ்மல் கசாப் கையில் காவி நிற கயிறு கட்டப்பட்டிருந்தது. அவன் பெயரான முகமது அஜ்மல் அமீர் கசாப் என்பதை மறைத்து பெங்களூருவை சேர்ந்த சமீர் தினேஷ் சவுத்ரி என போலி அடையாள அட்டையுடன் அனுப்பி வைத்துள்ளனர் என ராகேஷ் மரியா புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் போலீசார் மற்றும் புலனாய்வு நிறுவனங்கள் நடத்திய விசாரணையில் அவன் பாகிஸ்தான் பரீத்கோட்டை சேர்ந்த அஜ்மல் கசாப் என்ற உண்மை அம்பலமானது.

உயிருக்கு குறி வைத்த ஐ.எஸ்.ஐ.

புத்தகத்தில் கசாப் குறித்து மேலும் கூறியுள்ளதாவது:பயங்கரவாதிகள் அவனுக்காக போலி அடையாள அட்டைகளை தயார் செய்திருந்தனர். அவனுக்கு ‘ஜிஹாத்’ குறித்து எதுவும் தெரியாது. வறுமை நிலையில் இருந்த அவன் கொள்ளையடித்து பணம் சேர்க்கும் நோக்கத்தில் தான் நண்பன் முசாபர் லால் கானுடன் ‘லஷ்கர்-இ-தொய்பா’ இயக்கத்தில் சேர்ந்துள்ளான்.

பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தால் ஆயுதங்களும் ஆயுத பயிற்சியும் கிடைக்கும்.அவன் உயிருடன் பிடிக்கப்பட்டது நம்மை பொறுத்தவை முக்கிய ஆதாரம் என்பதால் அவன்உயிருக்கு லஷ்கர்-இ-தொய்பா மற்றும் பாக். ஐ.எஸ்.ஐ. இயக்கத்தால் எப்போதும் ஆபத்து இருந்தது. அதனால் அவன் புகைப் படம் கூட வெளியிட வேண்டாம் என நினைத்திருந்தோம். ஆனால் மத்திய புலனாய்வு அமைப்புகள் அவன் படத்தை வெளியிட்டன. அவனை பலத்த பாதுகாப்புடன் ரகசிய இடத் தில் வைத்திருந்தோம்.

தேதி மாறிய திட்டம்

அவனிடம் நான் தினமும் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தினேன். அதில் பல பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் தெரியவந்தன.அவன் என்னை மரியாதையுடன் ஜனாப் (சார்) எனஅழைத்தான். அவனுக்கு மூன்று கட்ட பயிற்சி அளித்த பயங்கரவாத இயக்கத்தினர் 1.25 லட்சம் ரூபாய் அளித்துள்ளனர்.அந்த பணத்தை தனது சகோதரியின் திருமணத்துக்கு அவன் அளித்துள்ளான்.

மும்பை தாக்குதலை 2008 செப். 27ல் நடத்தவே பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் திட்டமிட்ட நாளில் நடத்த முடியாமல் அதே ஆண்டு நவ. 26ல் அரங்கேற்றியுள்ளனர்.இவ்வாறு ராகேஷ் மரியா புத்தகத்தில்தெரிவித்துள்ளார்.