மதுரைக்கு 1937ல் வருகை தந்த மகாத்மா காந்தி, மீனாட்சி அம்மன் கோயில் தரிசனத்துக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அந்தக் கோயிலுக்குள் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களை அனுமதிப்பதில்லை என்பதைத் தெரிந்ததும் தரிசனம் செய்ய மறுத்துவிட்டார். மேலும், அக்கோயிலில் ஆலய நுழைவு போராட்டத்தை முன்னெடுக்குமாறு அங்கிருந்த காங்கிரஸ் தலைவர்களிடம் அறிவுறுத்தினார். காந்திஜியின் வேண்டுகோள் 1939 ஜூலை 8ல் நிறைவேறியது.
வைத்தியநாத ஐயர், முத்துராமலிங்க தேவர் தலைமையில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள், மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்தனர். செய்தி அறிந்த காந்திஜி, தனது ஆசையை நிறைவேற்றியதற்காக வெகுவாகப் பாராட்டினார். வைத்தியநாத ஐயருக்கு கடிதம் மூலமும் தனது பாராட்டைத் தெரிவித்தார். மதுரை போராட்டத்தை அடுத்து தமிழகத்தில் உள்ள ஹிந்து கோயில்களுக்குள் அனைத்து ஜாதியினரும் நுழையலாம் என அவசர சட்டம் பிறப்பித்தார் அன்றைய சென்னை ராஜதானியின் முதல்வர் ராஜாஜி. போராட்டத்தை முன்னெடுத்த வைத்தியநாத ஐயர், ஜாதி விலக்கம் செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் விஷ்ணாம் பேட்டையில் அருணாசலம் அய்யர், லட்சுமி அம்மாள் மகனாகப் பிறந்த வைத்தியநாத ஐயர், மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். சட்டம் பயின்று வழக்கறிஞரானார். புகழ்பெற்ற வழக்கறிஞரான வைத்தியநாத ஐயர், சுதந்திரப் போராட்டத்தில் தன் குடும்பத்துடன் ஈடுபட்டார். அவரின் மனைவியும், இரண்டு மகன்களும் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறைத் தண்டனை பெற்றனர்.
தனது மகளின் திருமணம், மகனின் மரணத்தின் போதும்கூட சிறையில் இருந்தார் வைத்தியநாத ஐயர். ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராகவும், மதுரை நகர காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்த வைத்தியநாத ஐயரின் வீட்டில் ஏராளமான பட்டியலின மாணவர்கள் தங்கியிருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன். வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் ராஜாஜி கைதானதும், அங்கு நடந்த கூட்டத்தில் வைத்தியநாத ஐயர் தடையை மீறிப் பேசினார். அவரை ஆங்கிலேயர் அடித்து சித்திரவதை செய்து அரை கி.மீ தூரம் தரையில் இழுத்துச் சென்று உடலெங்கும் காயத்துடன் சிறையில் அடைத்தனர். 1934ல் நாகர்கோவிலுக்குச் சென்று அங்கிருந்த நாகநாதசுவாமி கோயிலில் நாடார், பட்டியலின மக்களை தரிசனம் செய்ய வைத்தார். இதுபோல பல கோயில்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை இவர் அழைத்துச் சென்றுள்ளார்.
தமிழகத்தில் பட்டியலின மக்களின் முன்னேற்றம் பற்றி பேசும்போதெல்லாம் வைத்தியநாத ஐயரின் பெயர் நினைவு கூரப்படும்.