சூடானில் சிக்கித் தவித்த பாரத சமூகத்தினரை மீட்கும் ‘ஆபரேஷன் காவேரி’ நிறைவு பெற்றுள்ளது. சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் வெடித்து உள்நாட்டு போர் சூழல் நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டிலிருந்து பாரத சமூகத்தினரை மீட்கும் பணியை மத்திய அரசு கடந்த ஏப்ரல் 24ல் தொடங்கியது. ‘ஆபரேஷன் காவேரி’ என பெயரிடப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கையின் மூலம் இதுவரை 3,862 பாரத சமூகத்தினர் பத்திரமாக பாரதம் அழைத்து வரப்பட்டனர். பாரத அரசின் சீரிய முயற்சிகள், தூதரக ரீதியிலான நடவடிக்கைகள், திட்டமிட்ட செயல்பாடுகள், பாரத விமானப்படை மற்றும் கப்பற்படையினரின் துணிச்சலான நடவடிக்கைகள் மூலம் இவர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டது. கடந்த வெள்ளிக்கிழமை 47 பேர் பாரதம் வந்தடைந்த நிலையில், இந்த நடவடிக்கை நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.