ஆசிய நீச்சல் கூட்டமைப்பு, இந்திய நீச்சல் சம்மேளனம் சார்பில் பெங்களூருவில் ஏஷியன் ஏஜ் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. முதல் நாளில் ஸ்ரீஹரி நடராஜ், ஆனந்த் அனில்குமார், சாஜன் பிரகாஷ் மற்றும் விரித்வால் கடே ஆகியோர் அடங்கிய இந்திய ரிலே அணி 3:22:72 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. ஈரான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்டவை முறையே வெள்ளி, வெண்கலம் வென்றன. இதுதொடர்பாக ஸ்ரீஹரி கூறியதாவது: தொடக்கமே இந்திய அணிக்கு சிறப்பான நாளாக அமைந்தது. விர்த்வாலின் கடைசி 100 மீ தூரத்தை 50.39 விநாடிகளில் கடந்தது, இந்தியா தங்கம் வெல்ல உதவியது.
மகளிர் பிரிவில் வெள்ளிப் பதக்கம்: மகளிர் 4-100 மீ ப்ரீஸ்டைல் ரிலே பிரிவில் ருஜுடா கடே, திவ்யா சட்ஜா, ஷிவானி கட்டாரியா, மானா பட்டேல் அடங்கிய இந்திய அணி, 4:00:76 விநாடிகளில் கடந்து வெள்ளி வென்றது. தாய்லாந்து தங்கப் பதக்கத்தையும், ஹாங்காங் வெண்கலத்தையும் வென்றன.
சிறுவர் -2 பிரிவில் வேதாந்த் மாதவன், உத்கர்ஷ் பட்டேல், சாஹில் லஸ்கர், ஷோன் கங்குலி ஆகியோர் கொண்ட இந்திய அணி 3:41:49 விநாடிகளில் பந்தயதூரத்தைக் கடந்து வெள்ளி வென்றது. ஜப்பான் தங்கமும், சீன தைபே வெண்கலமும் வென்றன. இந்த நீச்சல் போட்டி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் சுற்றாகவும் உள்ளது.
குஷாக்ரா தங்கம்: 200 மீ. ப்ரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் குஷாக்ரா ரவாத் தனி நபர் தங்கப் பதக்கத்தை வென்றார்.