அவ‌ச‌ர முடிவுக‌ள்

“நான் இரவு என் மனைவியுடன் உங்க வீட்டில் தங்க வருகிறேன்” என்று தன் நண்பர் ஒருவருக்குத் தொலைபேசியில் ஒருவர் தகவல் தந்தார். அதற்கு அந்த நண்பர் “மகிழ்ச்சி வாருங்கள், ஆனால் எனக்கு ஒரு உதவி வேண்டும். ஒரு உயர்தர பேக்கரியில் காஸ்ட்லியான ‘கேக்’ வாங்கி வாருங்கள்” என்றார்.

“எதற்காக..?” என்று கேட்க, “என் மகன் தேர்வில் வெற்றி பெற்றிருக்கின்றான், ‘அதனை அவனுடன் கொண்டாட விரும்புகிறேன். என்னால் இப்பொழுது வெளியே செல்ல முடியாது. எனவே நீங்கள் வாங்கி வாருங்கள்” என்றார்.

அந்த நண்பரும் அதிகமாகவே செலவழித்து நல்ல ‘கேக்’ ஒன்றை வாங்கிச் சென்றார். கொண்டாட்டம் முடிந்தது. இவரும் ஊருக்குக் கிளம்பத் தயாரானார். ‘கேக்’கின் தொகையை கொடுப்பான் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவர், “கேக் கொஞ்சம் பெரியதாக வாங்கி வந்து விட்டீர்கள், மீதமுள்ள ‘கேக்’கை உங்கள் குழந்தைகளுக்குக் கொடுங்கள்” என்று ஒரு பெட்டியை கொடுத்தார்.

பணத்தைக் கொடுப்பான் என்று பார்த்தால் மீதத்தை நம் தலையில் கட்டி விட்டானே என்று மனைவியிடம் தன் நண்பனை சபித்துக் கொண்டே வந்தார். “விடுங்கள், அவர் ஒருவேளை மறந்திருக்கலாம் என்றார் மனைவி. வீட்டிற்கு வந்து அட்டைப் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ‘கேக்’குடன் பணமும், ஒரு கடிதமும் இருந்தது.

கடிதத்தில் “நண்பா, எனக்காக ‘கேக்’ வாங்கி வந்தாய். தொகையை கொடுத்து உன்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை. நீ வாங்க மாட்டாய் என்று தெரியும். பணத்தை பெட்டியில் வைத்துள்ளேன். தயவு செய்து இதை எடுத்துக் கொள்” என்றிருந்தது.

அதைப் படித்தவுடன் கன்னத்தில் அறைந்தது போலிருந்தது. அவனைப் பற்றி எவ்வளவு தவறாக நினைத்துவிட்டோம். ஆனால் அவன் நம்மைப் எவ்வளவு உயர்வாகக் கருதுகிறான் என்று வேதனையடைந்தார். உடனடியாக “உன்னைத் தவறாக புரிந்து கொண்டேன் என்னை மன்னித்து விடு” என தொலைபேசியில் மன்னிப்பு கேட்கப் போவதாக மனைவியிடம் சொன்னார்.

“அப்படி பேசி இன்னொரு தவறை செய்யாதீர்கள். “அப்படி சொன்னால் அவர் வேதனைப்படுவார். உங்களின் மதிப்பு குறைந்து விடும்” என்றார் மனைவி.