அவரவர் விதி

ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது மனைவி ஒரு ஜோதிடராக இருந்த மருத்துவ ஆலோசகரிடம் ஆலோசனை செய்தார். ஜோதிடர் ஜாதகத்தைப் பார்த்தார். பிறகு சில தனிப்பட்ட விஷயங்களை குறித்து அந்த மனிதரிடம் தனியாக பேசினார்.

வந்திருந்தவர், ‘நான் மிகவும் கவலைப்படுகிறேன், சொல்லப்போனால் கவலையில் மூழ்கியிருக்கிறேன். வேலை அழுத்தம், குழந்தைகளின் படிப்பு, வேலை, வீட்டுக் கடன், வாகனக் கடன்… என நான் மன உளைச்சலில் இருக்கிறேன்’ என்றார்.

அந்த ஆலோசகர் சிறிது யோசித்துவிட்டு, ‘நீங்கள் படித்த பள்ளிக்கு சென்று உங்கள் ’10ம் வகுப்பு’ பதிவேட்டைக் கண்டுபிடித்து, உங்கள் சகாக்களின் பெயர் விலாசங்களைப் பார்த்து, அவர்களை சந்தித்து அவர்களின் தற்போதைய நல்வாழ்வைப் பற்றிய தகவல்களை சேகரிக்க வேண்டும். எல்லா விவரங்களையும் குறிப்பெடுத்து ஒரு மாதம் கழித்து வந்து என்னை சந்தியுங்கள்’ என்றார்.

வந்தவரும், தனது பள்ளிக்குச் சென்று, பதிவேட்டைக் கண்டுபிடித்து, அதைக் கொண்டு தேடினார். 120 பேரில் 50 பேரின் தகவல்களை சேகரிக்க முடியவில்லை.

கிடைத்த விவரங்களில், 20 பேர் இறந்துவிட்டனர், 7 விதவைகள், 13 பேர் விவாகரத்து பெற்றவர்கள். 10 பேர் பேசக்கூட தகுதியில்லாத அடிமைகளாக உள்ளனர். 5 பேரின் நிலைமை மிகவும் மோசம். 6 பேர் பெரிய பணக்காரர்கள். சிலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிலர் முடக்குவாதம் நீரிழிவு, இதய நோய் என நோயாளிகளாகிவிட்டனர். விபத்துகளால் ஒன்றிரண்டு பேர் படுக்கையில் இருந்தனர். சிலருடைய பிள்ளைகள் நெறிகெட்டு, தறிகெட்டு பயனற்றவர்களாக அலைந்து திரிந்தனர். ஒருவர் ஜெயிலில் இருந்தார். ஒருவர் இரண்டு விவாகரத்துக்குப் பிறகு மூன்றாவது திருமணம் செய்துகொள்ளும் முயற்சியில் இருந்தார். இப்படி, பத்தாம் வகுப்பின் பதிவேடு விதியின் விளையாட்டை அவருக்கு விவரித்தது.

ஆலோசகர் கேட்டார், ‘இப்போது சொல்லுங்கள் உங்கள் மனச்சோர்வு எப்படி இருக்கிறது?’

வந்தவர், ‘இப்போது எனக்கு நோயும் இல்லை, மனது நிறைவாக இருக்கிறது. நான், நீதிமன்றம், போலீஸ், வக்கீல்களால் ஆக்கிரமிக்கப்படவில்லை. எனது மனைவி, குழந்தைகளும் மிகவும் நல்லவர்களாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள். நானும் நன்றாக இருக்கிறேன்’ என்றார்.

உலகில் நிறைய துக்கம் இருப்பதையும், தான் மகிழ்ச்சியாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் இருந்ததையும் அந்த மனிதர் உணர்ந்தார். மற்றவர்களின் தட்டுகளை எட்டிப்பார்க்கும் பழக்கத்தை விட்டுவிட்டு, நமது தட்டில் உள்ள உணவை அன்புடன் எடுத்துக் கொள்வோம். மற்றவர்களுடன் ஒப்பிடாமல் இருப்போம். ஏனெனில், ஒவ்வொருவருக்கும் அவரவர் விதி உள்ளது.

(சமூக ஊடகத்தில் இருந்து)