அல்-குவைதா துணை அமைப்பு கூண்டோடு காலி

 காஷ்மீரில் அல்குவைதா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பாக செயல்பட்டு வந்த அன்சர் உல் கஸ்வாத் உல் ஜிந்த்  அமைப்பைச் சேர்ந்த மூன்று முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன் மூலம் இந்த அமைப்பு கூண்டோடு  அழிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு – காஷ்மீர் டி.ஜி.பி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ஆகஸ்ட் 5 ல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் டிரால் பகுதியில் பதுங்கியிருந்த மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் சுட்டுக்கொன்றனர். அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான அன்சர்  உல் கஸ்வாத் உல்ஜிந்த் ஜம்மு-காஷ்மீரில் இயங்கி வந்தது. இந்த அமைப்பின் தலைவனாக இருந்த ஜாகிர் மூசா என்பவன் புல்வாமா மாவட்டத்தில் மே 23 ல் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் இருந்த மூசா அன்சர் அமைப்பை துவக்கினான். டிரால் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூஸாவின் வாரிசாக கருதப்பட்ட அப்துல் ஹமீது  லேல்ஹாரி உள்பட 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து அன்சர் அமைப்பு ஜம்மு காஷ்மீரில் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது. பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை தொடர்ந்து அனுப்பி வருகிறது. இதைத்தவிர காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்புகளையும் தூண்டிவிட்டு வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தொடர்பை துண்டிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். பயங்கரவாத அமைப்புகளில் இளைஞர்கள் சேருவதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். காஷ்மீரில் அமைதி திரும்புவதற்கு அரசுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும், போலீசுக்கும் மக்கள் உதவ வேண்டும் என்று காஷ்மீர் டி.ஜி.பி கேட்டுக்கொண்டார்.