அலைபேசி: நஞ்சாகும் அமுது

 

மொபைல் போன் வசதிதான். ஆனால் ஆபத்தாகிவிடக்கூடிய வசதி. பாருங்களேன், வலிந்து ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் இளைய தலைமுறையினர் சந்திக்கிற அவலத்தை:
பாடல், பாடம் கேட்கிறேன் என்ற போர்வையில் ப்ளூடூத்தைக் காதில் வைத்துக் கொள்ளும் போக்கு பெருகி வருகிறது. சாலையில் கடும் ட்ராபிக், விபத்து நேருமே என்று தெரிந்தும் கூட மொபைலில் கொஞ்ச நஞ்சமின்றி கொஞ்சல் பேச்சு.
ரயில் வருவதைக் கூடப் பார்க்காமல் ஆண்ட்ராயிட் அரட்டை. தூங்கும் நேரத்திலும் தலைமாட்டில் மொபைல், மின் சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும் போதும் ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல் தன்னை மறந்த பேச்சு.

தன்னுடன் படித்த நண்பன், கையில் பெருமதிப்பு மிக்க போன், அழகான மோட்டார் சைக்கிளில் தெருவில் சினிமா நாயகன் போல ஸ்டைலாக உலா வரும் போது, தானும் ஹீரோவாய் வலம் வருவோம் என்னும் அசட்டு எண்ணத்தில் பட்டணம் செல்வது.
இத்தனை அவலத்துக்கும் நடுவில் ஆக்கபூர்வமான வெளிச்சமும் தெரியத்தான் செய்கிறது. வருமுன் காப்போரான இளைஞர் ஒருவரை சந்திப்போம்:
மொபைலில் என்னென்ன பார்க்கலாம், எப்போது மிஸ்ட் கால் கொடுத்தவரை மீண்டும் அழைக்கலாம், எந்த அழைப்புக்களை / விளம்பரங்களை தவிர்க்கலாம் என்றெல்லாம் முன்னுரிமைப் பட்டியல் இவர் மனதில் நிழலாடிக்கொண்டே இருக்கும்.
மொபைலில் செய்தி பார்ப்பது, பிறர் பேசுவதைக் கேட்பது இவற்றில் மொபைலின் செயல்பாட்டு வேகத்திற்கு ஈடாக செயல்பட்டு “அலர்ட்னஸ்” எனும் மன பட்டனைத் தட்டத் தவற மாட்டார். அதில் வரும் விழிப்புணர்வுச் செய்திகளை விடமாட்டார்.
நதிகள், வனங்கள், சுற்றுலா ஸ்தலங்கள், ஆன்மிக அருளாளர் கருத்துரைகள் என்று பல புத்தகங்களில் பொதிந்துள்ள வற்றை கையடக்க ஆண்ட்ராய்டிலேயே அள்ளிப் பருகிவிடுகிறார் இந்த கெட்டிக்காரர்.

இவர் வீட்டில் சாப்பிடும் போது பார்க்கணுமே. எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவார்கள். அந்த நேரம், குடும்பத்தினர் அனைவர் மொபைல்களும் கூட அலமாரியில் ஒன்றாக கொலுவீற்றிருக்கும். அலமாரிச் சாவி ஆணியில் தொங்கும்!
இவர் கோயிலுக்குப் போகும் அழகே அழகு. செருப்பு, ஷூ வெளியே போட்டுவிட்டு போவதைப் போல மொபைலுக்கும் அதே ‘மரியாதை’ கொடுக்கிறார். கோயில் வாசலில் கவுண்டரில் ஒப்படைத்து டோக்கன் வாங்கி விடுகிறார்.
ஒரு பொது நிகழ்ச்சிக்கு போகிறார் என்றால் அலைபேசியை அணைத்து வையுங்கள் என்ற அறிவிப்பு இவருக்குத் தேவைப்படாது. அணைத்த பிறகுதான் அரங்கத்திற்குள்ளேயே வருவார்.