‘இந்தாருங்கள். இதைப் படித்துவிட்டுத் தாருங்கள் ’’ என்று பெரியபுராணம் புத்தகத்தை வேங்கடராமனின் சித்தப்பா சுப்பைய்யரிடம் நண்பர் ஒருவர் கொடுத்தார். வேங்கடராமன் பெரியபுராணம் பற்றித் தெரிந்துக்கொள்வதற்காக புத்தகத்தை எடுத்தார்.
‘உலகெலாம் என்று சிவபெருமானை அடியெடுத்துக் கொடுத்தருளிய அற்புத நூலை வேங்கட ராமன் படிக்கப் படிக்க, அதன் சுவையிலே ஆழ்ந்து போனார், பக்திச்சுவை கனித்த கதைகளை மெய்யடியார்களின் கதைகளை சேக்கிழார் தெள்ளு தமிழிலே சொல்லியிருக்கும் நேர்த்தி பாலகனை வெகுவாக ஈர்த்தது.
நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம் என்ற வரிகள் சிவனடியார்களின் ஆழ்ந்த பக்திக்கு எடுத்துக்காட்டாக இருப்பதை பாலகன் அனுபவித்து ஆனந்தமடைவார். அறுபத்து மூவரின் சிவபக்தியும் சிவசிந்தையும் தனக்குள்ளும் ஊற்றெடுக்க வேண்டும் மென்று விழைந்தார். காலையும் மாலையும் கோயிலுக்குச் சென்று அறுபத்து மூன்று நாயன்மார்களையும் வரிசையாக வணங்கிவிட்டு வரும் வழக்கம் வேங்கடராமனுக்கு வெகுநாட்களாகவே இருந்து வந்தது.
பெரிய புராணத்தைப் படித்த பின்பு கோயிலில் அறுபத்துமூன்று நாயன்மார்களையும் தரிசிக்கும் போது, அவர்களுடைய சிவபக்தியும், அவர்கள் அடைந்த துன்பங்களும் முடிவில் சிவனருள் பெற்றதும் நினைவில் எழும். வேங்கட ராமனின் கண்கள் நீரைத் தாரை தாரையாகப் பொழியத் துவங்கும். தமக்கும் அவர்களைப் போல பக்தி தோன்ற வேண்டும் என்று மனம் உருகினார், இந்த சின்னஞ்சிறு பாலகன்தான் பின்னாளில் பகவான் ரமண மகரிஷி ஆனார்.