கேரளத்தில் ஹிந்துக் கோயில்களில் ‘தலித்’ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பூசாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து, நாடு முழுவதும் ஊடகங்களிலும் அறிவுஜீவிகள் மத்தியிலும் பாராட்டிப் பேசப்படுவது ஒரு வகையில் வருத்தம் அளிப்பதாகவே உள்ளது.
கேரளத்தை ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசானது, யாருமே செய்யத் துணியாத ஒரு காரியத்தை செய்து சாதனை படைத்து விட்டதாக அம்மாநிலத்தை தமிழ்நாட்டில் உள்ளவர்கள் அதிகமாக கொண்டாடுகின்றனர்.
கடந்த 1936ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னரான சித்திரை திருநாள் பாலராம வர்மா மகாராஜா, கேரள கோயில்களில் ‘தலித்’கள் நுழைய அனுமதி அளித்தார்.
அன்றிலிருந்து 81 ஆண்டுகள் கழித்துதான் ஒரு ‘தலித்’ இனத்தைச் சேர்ந்தவர் கோயில் பூசாரியாக ஆக முடிந்திருக்கிறது என்று கூறி இந்த கொண்டாட்டத்துக்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சமூக நீதிக்காக ஈ.வெ.ரா. பெரியார் போராட்டத்தை தொடங்கி சுமார் அரை நூற்றாண்டு காலம் ஆகியும், இங்கு இன்னமும் ஒரு ‘தலித்’ ஹிந்துக் கோயிலில் பூசாரி ஆக முடியவில்லையே எனவும் ஆதங்கப்படுகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே கேரளத்திலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி, ஆங்காங்கே ஹிந்துக் கோயில்களில் ‘தலித்’ சமுதாயத்தைச் பூசாரிகளாக கடவுளர்களை தொட்டு வழிபாடு நடத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இப்போது, கேரள அரசின் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயில்களில் ‘தலித்’கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, அவர்கள் அரசுப் பணி பெற்றுள்ளனர். அவ்வளவே. கேரளத்தில் கோயில் பூசாரியாக நியமனம் பெற்றிருப்பவர்கள் ‘தலித்’ என்பதற்காக அவர்களை முதல்வர் பினராயி விஜயன் மாலை, மரியாதையுடன் அழைத்து வந்து அரசு வேலையை கொடுத்துவிடவில்லை.
தேவஸ்வம் போர்டு நடத்திய பகிரங்க போட்டித் தேர்வில் 946 பேர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட 62 பேரில் கேரள அரசின் இடஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் 36 பேர் ‘தலித்’, பிற்பட்ட வகுப்பைச்
இவர்களில் ஆறு பேர் புலையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய 26 பேர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள். கேரளத்தில் புலையர் சமுதாயம் தாழ்த்தப்பட்ட சமுதாயம்.
ஒரு காலத்தில் புலையர் இனமும் நாடாண்ட இனம்தான். அவர்களது குலத் தொழில் வேளாண்மை. தாந்திரீகம் செய்வதும் உண்டு. அதில் புலமை பெற்றவர்களிடம் உயர்சாதி மக்கள் ‘இறைவாக்கு’ கேட்க நாடுவதும் உண்டு.
ஆக, கடவுளுக்கும் புலையர்களுக்கும் அறிமுகம் இல்லாமல் இல்லை. அந்த வகையில் கோயில்களில் கடவுளுக்கு பூஜை செய்வது என்பது அவர்கள் அறியாததோ, அவர்களுக்கு அந்நியமானதோ அல்ல. இப்போது அவர்கள் முறைப்படி பயிற்சியும் தகுதியும் பெற்றே பூசாரி பணி பெற்றுள்ளனர்.
ஆறு தலித்துகளுக்கும் அரசுப் பணி கிடைக்க அவர்கள் சாதி மட்டுமே காரணம் என கூறினால் அது அவர்களின் தகுதியையும் திறமையையும் இழிவுபடுத்துவதற்கு சமம்.
கோயில் பூசாரியாகியுள்ள ஆறு தலித்களில் ஒருவரான திருவல்லா அருகே உள்ள கீழசெரிவல்லகடவு கிராமத்தைச் சேர்ந்த 22 வயது யது கிருஷ்ணா, எர்ணாகுளத்தில் புகழ் பெற்ற வேத விற்பன்னர் கே.கே. அநிருத்தன் தந்திரியின் வழிகாட்டுதலில் கடந்த 30 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்றுவரும் ஸ்ரீ குருதேவா வைதீக தாந்திரிக வித்யா பீடத்தில் 10 ஆண்டுகளாக முறையாக வேத மந்திரங்களைக் கற்றவர்.
தனது ஆறாவது வயதில் இந்த வித்யா பீடத்துக்கு வந்த இவர், முதலில் பூஜைக்கான பூக்களை கொண்டு வருதல் உள்ளிட்ட சேவைகளை செய்து தன்னை இறைபணிக்கு பக்குவப்படுத்திக் கொண்டவர். அதுமட்டுமன்றி சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்திருக்கிறார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக தேவஸ்வம் போர்டு நடத்திய போட்டித் தேர்வில் நான்காவது இடத்தை பிடித்து சாதனை படைத்தவர். ஆகவே, முழுமையான தகுதியின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்னொருவரான 26 வயது ஜி. ஜீவன் என்பவர் ஏற்கெனவே, தேவஸ்வம் போர்டில் ஒப்பந்த அடிப்படையில் ஒன்பது மாதங்கள் பூசாரி வேலை செய்து வந்தவர்.
இப்படி ஒவ்வொருவரும் பூசாரி பணிக்கான தகுதியும், திறமையும், அனுபவம் படைத்தவர்கள்தானே தவிர சாதியை மட்டுமே தகுதியாக கொண்டு அவர்கள் யாரும் பூசாரிகளாகிவிடவில்லை என்பதே உண்மை. எல்லாவற்றிலும் சாதியையும் மதத்தையும் கலந்து ஆதாயம் தேடுவதில் அரசியல்வாதிகள் கில்லாடிகள் என்பது தெரிந்ததுதான். அந்த வகையில் தகுதியும், திறமையும் படைத்த ‘தலித்’கள் பூசாரி ஆகி இருப்பதிலும் சாதி சாயத்தை பூசி ஆதாயம் தேடுகின்றனர். இடதுசாரிகள் மலிவான அரசியல் செய்ய மாட்டார்கள் என்கிற கருத்து அண்மைக் காலமாக மாறி வருகிறது. மக்கள் மதிக்கும் எந்த அரசியல் தலைவரும் தங்களின் சாதிய அடையாளத்தால் தலைவர்களாகிவிடவில்லை.
அவர்களது அறிவு, ஆற்றல், தொண்டு, தியாகம், ஆகியவற்றால்தான் தலைவர்களாகி இன்று மக்கள் மனதில் உயர்ந்து நிற்கின்றனர். நாம்தான் அவர்களுக்கு சாதிய சாயம்பூசி கூண்டுக்குள் அடைத்து வைக்கிறோம். அதேபோலத்தான் முயற்சியாலும் பயிற்சியாலும் வாகைசூடியுள்ள இந்த ஆறு இளைஞர்களுக்கும் ‘தலித்’ முத்திரை குத்தி அவர்களை தனிமைப்படுத்திவிடக் கூடாது – அது சரியல்ல.
‘தலித்’கள் ஹிந்துக் கோயில்களில் பூசாரிகளாகி இருப்பது வரவேற்கத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், அதை ஒரு கட்சியின் சாதனையாக கொண்டாடுவது அரசியல் ஆதாயமே தவிர வேறொன்றுமில்லை.
தினமணியில் வெளியான ப. இசக்கி கட்டுரையிலிருந்து