அரசியலில் நேர்மை சூடான ஐஸ்கிரீம் அல்ல!

அரசியல் இன்று  முதலீடின்றி லாபம் சேர்க்கும் தொழிலாக மாறியுள்ளது.  இன்று செய்தித்தாளைப் படிக்கும்போது   தலை கிறுகிறுக்கச் செய்கின்ற விஷயங்களே அதிகம்.  சில நூறுகளில் அல்லது சிறு அன்பளிப்புகளில் தொடங்கிய  ஊழல் தற்போது லட்சங்களில், கோடிகளில்  வெளியாகின்றபோது அரசியலில் எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் சேவை செய்த சில முன்னோடிகளை  நினைத்துப் பார்ப்பது தவிர்க்க முடியாததாகிறது. அரசியலில் சாதனையாளர்களாகவும் எளிமையானவர்களாகவும் தமிழகத்தில் கக்கன், காமராஜர், ஜீவா, இரா. செழியன், நல்லகண்ணு, தேசிய அரசியலில் நானாஜி தேஷ்முக், லால் பகதூர் சாஸ்திரி, பண்டிட் தீனதயாள் உபாத்யாய, மொரார்ஜி தேசாய், குஷாபாவு தாக்கரே, நிருபன் சக்ரவர்த்தி போன்ற தலைவர்கள் நெஞ்சில் நிறைகிறார்கள். இவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் நிறைவான சேவையை மக்களுக்கு வழங்கியவர்கள். இவர்கள் தங்களுக்கென சேர்த்தது மக்களிடமிருந்து புகழையும் பாராட்டையும்தான். ஆனால் இன்று உள்ளூர் நகராட்சி வார்டு உறுப்பினர் கூட பத்து லட்ச ரூபாய்க்கு காரும் பல கோடி ரூபாய்க்கு வீடும் பல லட்சக்கணக்கில் சொத்தும் குவித்து விடுகிறார். நமக்கு சரியான வழிகாட்டிச் சென்றுள்ள தியாக சீலர்களை இத்தருணத்தில் நினைத்துப் பார்ப்போம்.

தமிழக அரசியலில் நாடாளுமன்றத்திற்கும் தமிழக சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர். உள்துறை, விவசாயம் உள்ளிட்ட துறைகளை வகித்த இவர் தன்னுடைய பதவி காலத்தில் உறவினர் ஒருவர் வேலைக்காக வந்து நின்றபோது, ‘எம்பிளாய்மென்ட் ஆபிசில் பதிவு செய், வேலை கிடைக்கும். நான் சிபாரிசு செய்தால் தகுதியான நபரின் வேலையை பறிப்பதாக அமையும். எனவே என்னால் அதை செய்ய முடியாது’ என்று பதிலளித்தவர். ஒன்பது ஆண்டுக்காலம் பல்வேறு துறைகளில் அமைச்சராக பதவி வகித்த இவர், அதைத் துறந்து செல்கையில் அமைச்சருக்கான காரை அலுவலகத்தில் விட்டுவிட்டு வீட்டுக்கு அரசுப் பேருந்தில் சென்றவர். தனது வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, தான் முன்னாள் அமைச்சர் என்பதைக் கூட வெளியில் சொல்லாமல் சாதாரண நோயாளியாக படுக்கை வசதியின்றி தரையில் படுத்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். அதே மருத்துவமனைக்கு ஆய்வுக்கு வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்  அவரை கடந்து செல்கையில் எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று அருகில் சென்று விசாரித்தபோதுதான் அவர் முன்னாள் அமைச்சர் கக்கன் என்பது எம்.ஜி.ஆர் உட்பட அங்குள்ள மருத்துவமனை ஊழியர்களுக்கு தெரியவந்தது. அந்த அளவுக்கு எளிமையின் சிகரமாக வாழ்ந்தவர் கக்கன்.

ஒன்பது ஆண்டுகாலம் மாநிலத்தின் முதல்வராகவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் தமிழக காங்கிரஸின் முக்கிய பிரமுகராகவும் வலம் வந்தவர் காமராஜர். இவர் தனது இறுதிக் காலத்தில் காங்கிரஸை எதிர்த்து ஸ்தாபன காங்கிரஸ் என்றொரு கட்சியை நடத்தி வந்தார். அவர் மீது கழகக் கண்மணிகள் பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். எமர்ஜென்சியை எதிர்த்து பல போராட்டங்களுக்கு முயன்றுவந்த நிலையில் திடீரென காலமானார். அவர் காலமானபோது அவரது வீட்டில் அவருக்கென 4 வேட்டி சட்டைகளும் 300 ரூபாய் பணமும் மட்டுமே இருந்தது. அந்த அளவுக்கு எளிமையாய் இருந்தவர். தனது ஆட்சி காலத்தில் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி சாதனை புரிந்தவர். தமிழகத்தில் பள்ளிகளும் அணைக்கட்டுகளும்  நீர்ப்பாசன திட்டங்களும் மதிய உணவு திட்டமும் அரசு ஊழியர் ஓய்வூதிய திட்டமும் அவரது பெருமையை இன்றளவும் நினைவூட்டுகின்றன.

காமராஜர் முதல்வராக இருந்தபோது சட்டசபையில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏவாக இருந்தவர் ஜீவானந்தம். அவரது தொகுதியில் ஒரு அரசு திட்டத்தை துவக்கி வைப்பதற்காக முதல்வர் காமராஜர் செல்ல வேண்டும். செல்லும் வழியில் ஜீவாவின் வீடு வழியே சென்று அவரையும் அழைத்துச் செல்லவேண்டும் என்பது காமராஜரின் நோக்கம். ஜீவா வீட்டிற்குச் சென்றார். ஒரு சிறிய குடிசை வீடு. வீட்டினில் ஜீவா ஒரு சிறிய துண்டைக் கட்டிக்கொண்டு நிற்கிறார். அவரை காமராஜர் சேர்ந்தே விழாவுக்குப்போகலாம் என்று அழைக்கிறார். அதற்கு ஜீவா, நீங்கள் போங்கள், நான் பின்னே வருகிறேன் என்கிறார். முதல்வரோடு சென்றால் சொந்தக் கட்சியினர் கோபித்துக் கொள்வார்களோ என்று ஜீவா பயப்படுகிறார் எனக் கருதி, அதெல்லாம் ஒன்றும் ஆகாது; என்னோடு நீங்கள் வாருங்கள் என்று காமராஜர் வற்புறுத்துகிறார். அப்போது ஜீவா அதெல்லாம் ஒன்றுமில்லை, ஒரே வேஷ்டிதான் இருக்கிறது. அதைத் துவைத்துக் காயப்போட்டுள்ளேன். அது காய்ந்தபின் அதை எடுத்துக் கட்டிக்கொண்டுதான் வெளியே வரவேண்டும். எப்படியும் அரைமணி  நேரம் ஆகும். எனவே நீங்கள் செல்லுங்கள், நான் பின்னே வருகிறேன் என்று சொன்னார். அந்த அளவுக்கு எளிமை.

திரிபுரா  மாநிலத்தில் பத்தாண்டுக் காலம் முதல்வராக இருந்தவர். தனது ஆட்சி காலத்தில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்றவர். இவர் சக கட்சியாளரான மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசு மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பி அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியவர். கட்சி நடவடிக்கை எடுத்தது. ஊழல் செய்த ஜோதி பாசு மீதல்ல; ஊழலை வெளிப்படுத்திய நிருபன் சக்ரவர்த்தி மீது! 10 ஆண்டு  அரசு பதவியைத் துறந்துவீட்டிற்குச் சென்றபோது அவர் எடுத்துச் சென்ற உடைமைகள் இரண்டு சூட்கேஸுகள் மட்டும்தான். ஒன்றில் அவரது உடைகள்; மற்றொன்றில் அவர் படித்த புத்தகங்கள்.

முதன் முதலாக காங்கிரஸ் அல்லாத ஒரு அரசுக்கு தேசிய அளவில் தலைமைப் பொறுப்பேற்றவர் மொரார்ஜி தேசாய். இவரது ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து மீண்டும் தங்களது அரசை ஏற்படுத்தி விட வேண்டுமென்பதற்காக இந்திரா, சஞ்சய் சதிதிட்டம் மூலம் சரண்சிங், ராஜ் நாராயணன் கும்பல் எழுப்பியதே  இரட்டை உறுப்பினர் பிரச்சினை. ஜனதா கட்சியின் அங்கத்தினராக இருந்த பாரதிய ஜனசங்க தொண்டர்கள் தங்கள் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸில் உறுப்பினராக உள்ளதை ஏற்க முடியாது என்றும் ஒன்று அவர்கள் ஜனதா கட்சியுடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும் அல்லது ஆர்.எஸ்.எஸ்ஸுடனான தொடர்பை விட்டுவிட வேண்டும் என்று அந்தக் கும்பல் கூறியது. அந்த சமயத்தில் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயிடம் பலர் வந்து நீங்கள் அதிருப்தியாளர்களிடம் பேசுங்கள். அவர்களை சரிசெய்து விடலாம் என்று சொன்னபோது, என் மீது நம்பிக்கை வைத்து நியாயமுடன் செயல்படுவேன் என்று தலைமைப் பொறுப்பை கொடுத்தவர்கள் தற்போது எதிர்க்கிறார்கள் என்றால் அவர்களுக்கு பின்னே வேறொரு திட்டம் இருக்கிறது என்று அர்த்தம்.  நான் அழைத்துப் பேசினால் அவர்களோடு சில விஷயங்களில் சமரசமாக போக வேண்டும். அதுகூட ஒரு வகையில் ஊழல்தான். இதை ஒருபோதும் நான் செய்ய மாட்டேன். என் மீது நம்பிக்கை இல்லை என்றால், பதவியைத் துறக்க இன்று கூட தயாராக உள்ளேன் என்றார்.

காங்கிரஸ் அலுவலகத்தில் சில காலம் ஊழியராக பணியாற்றிய சாஸ்திரிக்கு 20 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. அதைக் கொண்டு அவர் தனது சிறிய குடும்பத்தை நடத்தி வந்தார். ஒரு சமயம் அவரது நண்பர் ஒருவர் தனது குடும்ப செலவுக்காக அவரிடம் 5 ரூபாய் கடனாகத் தேவை  கொடுக்க முடியுமா என்று கேட்கிறார். அதற்கு சாஸ்திரி  நான் கட்சி வழங்கும் 20 ரூபாய் சம்பளத்தில் தான் குடும்பத்தை நடத்தி வருகிறேன். என்னிடம் பணம் எதுவும் இல்லை. ஆனால் ஒருவேளை மனைவியிடம் கேட்டு பார்க்கிறேன். அவரிடம் இருந்தால் வாங்கித் தருகிறேன் என்று வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மனைவியிடம் தனது நண்பர் குடும்ப கஷ்டம் காரணமாக 5 ரூபாய் கடன் கேட்கிறார், இருந்தால் கொடு என்றார். அவரது மனைவி வீட்டிற்குள் சென்று தன்னிடமிருந்த ரூபாய் 5ஐ நண்பரிடம் கடனாகக் கொடுத்தார். நண்பர் சென்ற பின்னர், சாஸ்திரி தனது மனைவியிடம்,  நமது வீட்டுச் செலவுக்கே எனது சம்பாத்தியம் சரியாகி விடுகிறதே, எப்படி உன்னால் ஐந்து ரூபாய் கொடுக்க முடிந்தது என்று கேட்டார். உடனே மனைவி, நீங்கள் கொடுக்கும் 20 ரூபாயிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்ததே இந்த ஐந்து ரூபாய் என்றார். அடுத்த நாள் அலுவலகத்திற்கு சென்ற சாஸ்திரி, அலுவலகக் காரியதரிசியிடம் அடுத்த மாதத்திலிருந்து எனது சம்பளப் பணத்தில் ஐந்து ரூபாய் குறைத்துக் கொள்ளுங்கள். எனது மனைவி குறைந்த வருமானத்திலேயே குடும்பம் நடத்த கற்றுக்கொண்டு விட்டார் என்று கடிதம் கொடுத்தார்!

ஒரு சமயம் தமிழகத்தில் பிரபலமான படத் தயாரிப்பாளர் ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் தனது வீட்டின் ஒரு சுபநிகழ்ச்சிக்காக அழைப்பிதழ் வழங்குவதற்கு பிரதமர் இல்லத்திற்கு சென்றிருந்தார். அப்போது அழைப்பிதழுடன் ஒரு காஞ்சிபுரம் பட்டு சேலையும் சேர்த்து கொடுத்திருந்தார். அவர் கொடுக்கும்போது வாங்கிக் கொண்டு பேசி வழியனுப்பி வைத்தார் சாஸ்திரி. மெய்யப்பச் செட்டியார் தனது வேலை முடித்து ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார். அப்போது பிரதமர் அலுவலக ஊழியர் ஒருவர் கையில் ஒரு பையுடன் அவரை சந்தித்து, பிரதமர் இதை தங்களிடம் ஒப்படைக்கச் சொல்லி வழங்கியதாக தெரிவித்தார். அதைப் பிரித்துப் பார்த்தபோது, காலையில் அழைப்பிதழுடன் தான் வழங்கிய பட்டுச் சேலையும் ஒரு கவரும் இருந்தது. அந்தக் கவரில் சாஸ்திரி ஒரு கடிதத்தைக் கொடுத்திருந்தார். அரசு உயர் பதவியில் இருப்பவர்கள் பிறரிடமிருந்து எந்த ஒரு அன்பளிப்பையும் பெறுவது நாகரிகமில்லை. அப்படிப் பெறுவதும் ஒரு வகையில் ஊழலே. எனவே என்னால் தாங்கள் கொடுத்த அன்பளிப்பை ஏற்கமுடியவில்லை. அதை தாங்கள் கொடுக்கும்போதே மறுத்து திருப்பி அளித்தால் அது  நாகரிகமாகவும் இருக்காது. எனவே தனியே அனுப்பியுள்ளேன். தயவுசெய்து திரும்பப் பெற்றுக் கொள்ளவும் என்று கடிதத்தில் கோரியிருந்தார் சாஸ்திரி!

 

 

பாரதிய ஜனசங்கத்தின் தலைவராக இருந்து கட்சியை திறம்பட வழிநடத்தியவர் பண்டிட் தீனதயாள் உபாத்யாய (1916 – 2016). இவர் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ்காரர், தான் உயர்ஜாதி சமூகத்தைச் சார்ந்தவர், எனவே எனக்கு வாக்களியுங்கள் என வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அதே சமூகத்தைச் சார்ந்தவர்தான் தீனதயாள் அவர்களும். எனவே ஜனசங்கத் தொண்டர்கள் அவரிடம்,  நானும் அதே சமூகத்தைச் சார்ந்தவன் தான், எனவே எனக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வையுங்கள் என ஆலோசனை கூறினார். அதைக்கேட்ட மாத்திரத்திலேயே நிராகரித்த தீனதயாள் உபாத்யாய அரசியலில் தகுதி, நேர்மை அடிப்படையிலேதான் நமது பிரச்சாரம் அமையவேண்டும், மாறாக, ஜாதியைச் சொல்லி ஓட்டு கேட்கவேண்டுமானால் நான் தேர்தலில் இருந்து விலகி விடுகிறேன். என்னால் அது முடியாது என்று பதிலுரைத்தார். ஒரு சமயம் டெல்லி மாநகராட்சித் தேர்தலில் ஜனசங்கம் போட்டியிட்டது. எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் அதிக அளவு பணம் செலவு செய்து விதவிதமாக போஸ்டர், துண்டு பிரசுரங்கள் வெளியிட்டிருந்தார். தீனதயாள்ஜியிடம் ஒரு தொண்டர் வந்து, கட்சியில்தான் பணம் இருக்கிறதே அதை பிரச்சாரத்திற்கு பிறகு வேண்டுமென்றால் வசூலித்துக் கொள்ளலாம் என ஆலோசனை சொன்னபோது, கட்சியின் பணம்   தொண்டர்கள் தந்தது. அது எந்த காரியத்திற்காக வசூலிக்கப்பட்டிருக்கிறதோ அதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மாறாக, நமது சுயநலத்திற்காக அதை பயன்படுத்தினால் எதற்காக வசூலிக்கப்பட்டதோ அந்த காரண காரியம் தடைபட்டுப் போய்விடும். பிறகு அதற்காக மீண்டும் நாம் வசூலில் ஈடுபட வேண்டியிருக்கும். இது தர்மமாகாது. அதை விட  நாம் தேர்தலில் தோல்வியை தழுவினால் கூட ஒன்றும் ஆகிவிடாது என்று பதிலளித்தார்.

 

நாட்டில் 1975ல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது அதை எதிர்த்து மக்கள் எழுச்சி போராட்டம் நடத்த மக்கள் போராட்டக் குழு மூலமாக பல்வேறு போராட்டங்களை நடத்திவந்தவர் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் நானாஜி தேஷ்முக். ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் அமைந்த அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அவர். தேர்தலுக்காக ஜனசங்கம், ஸ்தாபன காங்கிரஸ், சோஷலிஸ்ட், லோக் தளம் போன்ற கட்சிகள் இணைந்து ஜனதா கட்சியைத் துவங்கியபோது அதன் முக்கியத் தலைவராகவும் இருந்தவர். மொரார்ஜி தேசாய் தனது அரசின் அமைச்சர்கள் பட்டியலை தயார் செய்துகொண்டு  ‘நானாஜி, எனது அமைச்சரவையில்  நீங்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும், உங்களுக்கு எந்த இலாகா வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்’ என வேண்டுகோள் அதனை அமைதியாக மறுத்துவிட்டு, ‘நான் எந்த அரசு பொறுப்பிலும் இருக்க விரும்பவில்லை, மக்கள் சேவைக்காக அவர்களோடு இணைந்து செயல்பட விரும்புகிறேன்’ என்று சொல்லி கோண்டா மாவட்டத்தில் பழங்குடி மக்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் நானாஜி தேஷ்முக்.