அயோத்தி வழக்கு முடிந்தது!- தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு

அயோத்தி வழக்கில், 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த இறுதி விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தப் பிரச்னை குறித்து சமரசம் ஏற்படுத்த, மூன்று பேர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்திருந்தது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பிரபல வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர், இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர். பல்வேறு தரப்பினருடன், இக்குழு நடத்திய பேச்சில் சமரசம் ஏற்படவில்லை.அதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, ஆக., 5 முதல், தினமும் விசாரித்து வருகிறது.

நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் இந்த அமர்வில் இடம் பெற்றுள்ளனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நவ., 17ல் ஓய்வு பெறுகிறார். அதற்கு முன் தீர்ப்பு அளிப்பதற்கு வசதியாக, வழக்கின் விசாரணையை, விரைவாக முடிக்க முடிவு செய்யப்பட்டது.இது வரை, 39 நாட்கள் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், நேற்று மாலை, 5:00 மணிக்குள், இரு தரப்பு வாதங்களை நிறைவு செய்ய, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, ஹிந்துக்கள் தரப்பிற்கு, 45 நிமிடங்களும், முஸ்லிம்கள் தரப்பிற்கு, ஒரு மணி நேரமும் நேற்று ஒதுக்கப்பட்டது.

ஹிந்துக்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதிட்டார். வாதத்தின் போது, ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது. அயோத்தியில் தான் ராமர் பிறந்தார் என்பது, ஹிந்துக்களின் நீண்ட கால நம்பிக்கை. ராம ஜென்ம பூமி என்பது, அயோத்தியில் மட்டுமே உள்ளது. எனவே, ஹிந்துக்களால், அங்கு தான் பிணைப்புடன் வழிபட முடியும்.முஸ்லிம்கள் தொழுகை நடத்த, நிறைய இடங்கள் உள்ளன. அதற்கு, இந்த இடத்தை தான் தர வேண்டும் என, எந்த அவசியமும் இல்லை.

சர்ச்சைக்குரிய இடத்தில், 1857 முதல், 1934 வரை, முஸ்லிம்கள் தொழுகை நடத்தியதற்கு, சில சான்றுகள் உள்ளன. அதன் பின், அவர்கள் அங்கு தொழுகை நடத்தியதற்கு ஆதாரங்கள் இல்லை. அதே போல, சர்ச்சைக்குரிய நிலத்தில், பாபர் மசூதி கட்டினார் என்பதை, சன்னி வக்பு வாரியம் நிரூபிக்க தவறிவிட்டது.அந்த இடம் முஸ்லிம்களுக்கு சொந்தம் என்றால், அதற்கு முன் அங்கு இருந்தவர்கள் எப்படி விரட்டி அடிக்கப்பட்டனர் என்பதையும், தெரிவிக்க வேண்டும்.

சர்ச்சைக்குரிய இடம், தங்கள் கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக இருக்கிறது என்பதை மட்டும் காரணம் காட்டி, அதை, வக்பு வாரியம் சொந்தம் கொண்டாட முடியாது. ஏனென்றால், அந்த இடம் அவர்களின் பிரத்யேக கட்டுப்பாட்டில் இல்லை. அங்கு, ஹிந்துக்களும் இருக்கின்றனர். இவ்வாறு, அவர் வாதாடினார். ஹிந்து மகா சபையைச் சேர்ந்த வழக்கறிஞர், வாதங்களை முன்வைக்க, கூடுதல் அவகாசம் கோரினார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ”இந்த வழக்கு விசாரணை, மாலை, 5:00 மணிக்குள் முடிவடையும். முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும். மேலும் வாதங்கள் இருந்தால், அதை எழுத்துபூர்வமாக தெரிவியுங்கள்,” என்றார்.

இதற்கிடையே, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட, மத்தியஸ்த குழுவும், பேச்சு நடத்தியபோது எடுக்கப்பட்ட முடிவுகள் அடங்கிய ஆவணங்களை, அறிக்கையாக தாக்கல் செய்தது. எனவே, அயோத்தி வழக்கில், 40 நாட்களாக தினமும் நடத்தப்பட்டு வந்த விசாரணை, நேற்று மாலை, 4:00 மணியுடன் நிறைவு செய்யப்பட்டது.

தீர்ப்பை ஏற்க வேண்டும்!

‘ராம ஜென்ம பூமி வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் இறுதி தீர்ப்பை, இரு தரப்பினரும் மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என, முஸ்லிம் தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.இது குறித்து, அனைத்திந்திய உலேமா கவுன்சில் பொதுச் செயலர் மவுலானா மெஹ்பூப் தர்யாடி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்ததில் மகிழ்ச்சி. மத உணர்வு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்க வேண்டும். தீர்ப்பு எப்படி இருந்தாலும், நாங்கள் அதை ஏற்றுக் கொள்வோம். எதிர்தரப்பும், அதற்கு தயாராக இருக்க வேண்டும். தீர்ப்பு வந்த பின், முஸ்லிம் சகோதரர்கள், அமைதியையும், நல்லிணக்கத்தையும் கட்டிக் காக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

ஆவணங்கள் கிழிப்பு – நீதிமன்றம் எச்சரிக்கை!

உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையின் போது, ராம ஜென்ம பூமியில் தான் ராமர் பிறந்தார் என்பதை நிரூபிக்கும் வரைபடங்கள் உடைய ஆவணங்களை, ஹிந்து மகா சபை தரப்பு, நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில், ராமர் பிறந்த இடம் குறித்த தகவல்கள் இருந்தன. ”இந்த ஆதாரங்களை வைத்து என்ன செய்வது?” என கூறிய முஸ்லிம்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜிவ் தவான், அவற்றை கிழித்து எறிந்தார்.

இதற்கு, கடும் அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ”வழக்கறிஞர்கள் இவ்வாறு நடந்து கொண்டால், நாங்கள் இங்கிருந்து அகன்று விடுவோம். இப்படிப்பட்ட செயல்கள், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்குமே தவிர, பலன் ஏற்படாது. நீதிமன்றத்தின் மாண்பை காக்க வேண்டும்,” என, கடுமை காட்டினார்.

தீர்ப்பு மீதான விவாதம்!

அயோத்தி வழக்கில், இரு தரப்பினரின் எழுத்துப்பூர்வமான வாதங்களை முன்வைக்க, உச்சநீதிமன்றம், மூன்று நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு, தீர்ப்பு குறித்து, நாளை முதல், நீதிமன்ற அறையில் விவாதிக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ‘அப்போது, வேறு யாருக்கும் அனுமதி கிடையாது’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.