அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக்பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்று 8-வது நாளாக விசாரணை மீண்டும் தொடர்ந்தது. நேற்று ராம் லாலா தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் கி.பி.12ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு ஒன்றின் படத்தை தாக்கல் செய்து, அதில் சமஸ்கிருத எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டினார்.
இந்த கல்வெட்டு அயோத்தியை தலைநகராக கொண்டு ஆண்ட கோவிந்த் சந்திரா என்ற அரசனை பற்றி கூறுகிறது. இந்த இடத்தில் ஒரு வைணவ கோவில் இருந்ததை இந்த கல்வெட்டு தெளிவாக்குகிறது.
இந்த கல்வெட்டு மற்றும் அதில் செதுக்கி உள்ள வாசகங்கள் எந்தவிதமான கேள்விகளுக்கும் அப்பாற்பட்டவை. ஆனால் அது அந்த இடத்தில் தான் எடுக்கப்பட்டதா? என்பது பற்றி மட்டுமே சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது.
‘பாஞ்சஜன்யா’ என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் வெளியிடப்பட்ட புகைப்பட ஆதாரத்தில் இந்த கல்வெட்டு அந்த இடத்தில் இருந்துதான் எடுக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. கட்டுரையை எழுதியவர் பாபர் மசூதி இடிப்பின்போது வடக்குபுற சுவற்றில் இருந்து இந்த கல்வெட்டு விழுந்ததை நேரில் பார்த்ததாக கூறியிருக்கிறார். இதனை மறுக்கும் வகையில் எந்த ஆதாரமும் இல்லை. எனவே, தொல்லியல் ஆய்வு துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷ யம் உறுதி செய்யப்படுகிறது.
சர்ச்சைக்குரிய இந்த இடம் ராமர் பிறந்த பூமிதான் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.இதுதொடர்பாக முன்பு அவர்கள் சாட்சியமும் அளித்துள்ளனர்.
1999-ம் ஆண்டில் சாட்சியம் அளித்த 90 வயது முதியவர், நம்பிக்கை மற்றும் பக்தியின் அடிப்படையில் இந்துக்கள் இந்த இடம் ராமர் பிறந்த இடம் என்பதை உறுதியாக நம்புவதாக கூறியிருக்கிறார். ராம்நாத் என்பவர் அளித்த சாட்சியத்தில், அயோத்தி அன்றாடம் விழாக்கோலம் பூண்டு இருந்தது என்றும் ராமரை தரிசிக்க ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அங்கு கூடியதாகவும் கூறியிருக்கிறார்.
அந்த இடத்தில் வைக்கப்பட்டு இருந்த ராமர் விக்கிரகம் மற்றும் அந்த இடம் இந்துக்களின் கட்டுப்பாட்டில் இருந்ததையும் கூறியிருக்கிறார்.
இந்த வழக்கில் முஸ்லிம்களும் சாட்சியம் அளித்தார்கள். முகமது ஹாசிம் என்பவர் அளித்த சாட்சியத்தில், மெக்கா எப்படி இஸ்லாமியர்களுக்கு புனிதமானதோ அதேபோல அயோத்தி இந்துக்களுக்கு புனிதமானது என்று கூறியிருக்கிறார். மற்றொரு இஸ்லாமியர், இந்த இடத்தில் இந்து கோவில் இருந்து, அந்த கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது என்பது நிரூபணம் ஆனால் அதனை இஸ்லாமியர்கள் மசூதி என்று ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, அந்த இடத்தில் தொழுகை நடந்ததாக ஏதேனும் சாட்சியங்கள் அப்போது கூறியதா? என்று கேள்வி எழுப்பினார்கள்.