அடிப்படைவாதத்திற்கு அடிபணிந்த சி.பி.எம்

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், முதல்வருமான பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு, முஸ்லிம் அடிப்படைவாதிகள் மண்டியிடச் சொன்னால் அவர்கள் முன் தவழும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. கடந்த நவம்பர் 25 முதல் டிசம்பர் 23, 2022 வரையிலான மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் நடத்தப்படும் பாலின பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பாலின வளக் கூட்டத்தின் போது குடும்பஸ்ரீ தன்னார்வத் தொண்டர்கள் செய்யப்படவிருந்த “சொத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை வழங்குவோம்” என்ற உறுதிமொழியை கேரள அரசு திரும்பப் பெற்றது இதனை நிரூபித்துள்ளது.

கேரளாவில் உள்ள ஒரு சக்திவாய்ந்த முஸ்லிம் மத அமைப்பான சமஸ்தா கேரள ஜம் இயத்துல் குத்பா கமிட்டியின் தலைவரான நாசர் ஃபைசி கூடத்தாய், இந்த உறுதிமொழிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அவர், இது முஸ்லிம்களின் மதச் சுதந்திரத்தை மீறுவதாகும். குர்ஆனின் கொள்கைகளுக்கு எதிரானதாகவும் இருக்கிறது. இது ஷரியா சட்டத்திற்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய மதச் சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இந்த உறுதிமொழி அமைந்துள்ளது. மூதாதையர் சொத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை என்பது இஸ்லாமியக் கொள்கைகளுக்கு ஏற்புடையதல்ல. இரண்டு பெண்களுக்குச் சமமான சொத்தில் பங்கு பெற ஒரு ஆணுக்கு உரிமை உண்டு. தந்தையின் சொத்திலிருந்து ஆண் உறுப்பினருக்குக் கிடைக்கும் தொகையில் பாதி மட்டுமே பெண் உறுப்பினருக்கு அனுமதிக்கப்படும். ஒரு குடும்பத்தைக் கவனிக்கும் முழுப் பொறுப்பையும் ஆண் ஏற்றுக்கொள்கிறான் என்பதால் அது பாகுபாடு அல்ல. இதனை பாரபட்சமாக கருத முடியாது. இந்த மத உரிமையை மறுப்பது போராட்டங்களுக்கு வழிவகுக்கும்” என கூறினார்.

இதனையடுத்து கேரள அரசு, இந்த உறுதிமொழியை அவசர அவசரமாக திரும்பப் பெற்றது. இது சமூக ஊடக பயனாளர்களிடையே கோபத்தை வரவழைத்துள்ளது. அடிப்படைவாத அழுத்தத்திற்கு அடிபணிந்து, ஆண்களுக்கு சமமான உரிமைகள் பெண்களுக்கு இல்லை என்பதை கேரள அரசு ஒப்புக்கொள்கிறதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.. வாக்கு வங்கிக்கு முன்னால் பினராயி விஜயன் அடிபணிந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். முன்னதாக, தற்போது நடைபெற்ரு வரும் உலகக் கால்பந்து கோப்பையின்போது கூட, இளம் தலைமுறையினரின் கால்பந்து விளையாட்டு ஆர்வத்திற்கு எதிராகவும் கூட சர்ச்சை கருத்துகளை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.