உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் ஆகஸ்ட்டு 29ல் பிறந்த தியான் சந்த் பாரத ஹாக்கி விளையாட்டின் இணையற்ற வீரர். அவரின் அபாரமான ஆட்டத்தினால் உலக தலைவர்களையே வியக்க வைத்தார். பாரதம் மற்றும் உலக ஹாக்கி வரலாற்றில் இன்றும் மிகச் சிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார் தியான் சந்த்.
இவரின் தந்தை பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்தபோது ராணுவ ஹாக்கி அணியில் விளையாடினார். இவர் தந்தையின் பணிமாறுதல் காரணமாக இவரின் குடும்பம் பல நகரங்களில் குடிபெயர வேண்டியிருந்தது. இதனால் தியான் சந்த் ஆறு வருடப் பள்ளிப் படிப்போடு நிறுத்திக் கொண்டார். இவர்களின் குடும்பம் இறுதியாகஉத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் தங்கியது.
1928ல் ஆம்ஸ்டர்டாம், 1932ல் லாஸ் ஏஞ்ஜல்ஸ், 1936ல் பெர்லின் என மூன்று ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பாரத ஹாக்கி அணிக்கு தங்கப்பதக்கம் பெற்றுத் தந்தார். 1928 முதல் 1964 வரையிலான காலங்களில் நடந்த எட்டு ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இவர் இடம்பெற்றிருந்த பாரத ஆடவர் ஹாக்கி அணி தொடர்ந்து ஏழு போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்தது.
ஹாக்கி விளையாட்டில் எதிரணி வீரர்களை ஏமாற்றி பந்துகளை சிறப்பாக கையாள்வதில் மேதை எனப் புகழப்பட்டார். இவர் மொத்தம் 400 கோல்கள் அடித்துள்ளார். ஹாக்கி வரலாற்றில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச கோல்கள் இது. ‘அவர் ரன் எடுப்பது போல கோல் அடிக்கிறார்’ என கிரிக்கெட் பிதாமகன் டான் பிராட்மேன் புகழ்ந்தார். ‘ஹாக்கி மந்திரவாதி’ என உலகமே புகழ்ந்தது. தியான் சந்தின் ஆட்டத்தால் ஈர்க்கப்பட்ட ஹிட்லர், அவருக்கு ஜெர்மன் ராணுவத்தில் உயர் பதவி, வாகனம், வீடு தருவதாகக் கூறினார். அப்போது பாரத ராணுவத்தில் லான்ஸ் நாயக் என்கிற அதிகாரியல்லாத பதவியில் இருந்த தயான் சந்த் அதை மறுத்தார்.
1956ல் பத்ம பூஷண் விருதினைப் பெற்றார். சமீபத்தில் மத்திய அரசு விளையாட்டு வீர்களுக்கு வழங்கப்படுகின்ற மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றி தியான்சந்த் கேல்ரத்னா விருது என்ற பெயரில் இனி வழங்கப்படும் என்று அறிவித்தது. இவரின் பிறந்த நாளான ஆகஸ்டு 29 தேசிய விளையாட்டு நாளாக பாரதத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.