ஷாஜஹான் ஷேக் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு

சந்தேஷ்காலியில் ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜஹான் ஷேக்கின் வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் (8.3.24) சோதனை நடத்தினர்.

ரேஷன் வினியோக மோசடி வழக்கு தொடர்பாக இந்தப் பகுதியின் திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜஹான் ஷேக்கிடம் விசாரிக்க, ஜன., 5ல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றனர்.

ஆனால், ஷேக்கின் ஆதரவாளர்கள், அமலாக்கத் துறை அதிகாரிகளை தாக்கினர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானார். இதைத் தொடர்ந்து, அவர் மீது பல்வேறு புகார்கள் வெளிவரத் துவங்கின. சந்தேஷ்காலியில், பழங்குடியின மக்களை மிரட்டி, நிலங்களை ஷாஜஹான் ஷேக், தன் ஆதரவாளர்கள் உதவியுடன் பறித்துள்ளார். மேலும், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவருக்கு எதிராக, மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர்.

நீண்ட இழுபறிக்குப் பின், நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பிப்., 29ல் அவர் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஒப்படைக்கப்பட்ட ஷாஜஹான் ஷேக்கிடம், சி.பி.ஐ., விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சந்தேஷ்காலியில் உள்ள ஷாஜஹான் ஷேக்கின் வீட்டில் நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஏற்கனவே அமலாக்கத்துறையால் சீல் வைக்கப்பட்ட ஷாஜஹான் ஷேக்கின் வீட்டிற்குள் நுழைந்து, சி.பி.ஐ., அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதுடன், இவ்வழக்கிற்கான தடயங்களையும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுதவிர, அந்த வீட்டின் அருகே உள்ள சுற்றுப்புறப் பகுதிகளிலும் விசாரணை நடத்தினர். இவை அனைத்தையும், வீடியோவாகவும் சி.பி.ஐ., அதிகாரிகள் பதிவு செய்தனர். இதையொட்டி, மத்திய படையினர் பாதுகாப்பு பணிக்காக அப்பகுதி முழுதும் குவிக்கப்பட்டனர். இச்சோதனையில், சி.பி.ஐ., அதிகாரிகளுடன், அமலாக்கத்துறை மற்றும் தடயவியல் பிரிவு அதிகாரிகளும் பங்கேற்றனர்.