வெள்ள நிவாரணப் பணி அவைபற்றி கருத்துக்களும் வெள்ளத்தில் அறிமுகமான ஆர். எஸ். எஸ். !

தாயனூரில் ஆர். எஸ். எஸ். தொண்டு

கடந்த ௧௯௭௮ல், எங்கள் கிராமத்தில் வெள்ளம் பெருக்கெடுத்தது. திண்டுக்கல்லிலிருந்து கிழக்கு முகமாக நோக்கி மணப்பாறை, தாயனூர், இனியனூர் வழியாக பாயும் ‘அரியா ஆறு’ எனும் காட்டாறு பெருக்கெடுத்தது. சுமார் 2,000 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டு இருநூறு வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அதில் மனிதர்களைத் தவிர, மற்ற யாவும் இழக்கப்பட்டன. அந்தப் பேராபத்தில் எந்த விதமான உதவியும் கிடைக்காமல் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவி செய்ய ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தைச் சார்ந்த ஊழியர்கள் நல்ல சமயத்தில் முன் வந்தனர். வெள்ளத்தில் தவித்த மக்களுக்கு உதவி புரிய வந்த அவர்களை நான் மனமார வரவேற்றேன். சங்கத்தின் முப்பது தொண்டர்கள் வெள்ளம் புகுந்த பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு, அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் பட்டியலை எழுதித் தயாரித்து, அதற்கு அடுத்த நாளே அம்மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள், துணிமணிகள், படுக்கை விரிப்புகள், பாய் மற்றும் சமையல் பாத்திரங்கள் போன்றவைகளைத் திரட்டிக் கொண்டு வந்து உடனடியாக செய்யவேண்டிய நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். அதற்குப் பின் சுமார் 150 வீடுகளுக்கு அஸ்திவாரம் இட்டு சுமார் ஒரு மாத காலத்திற்குள் கதவு, ஜன்னல் போன்ற எல்லா வசதிகளையும் உடைய புது வீடுகளாகக் கட்டி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அளித்தனர். புதிய வாழ்க்கைத் துவங்கிய அந்தக் குடும்பத்தினர்கள் புத்தாடை அணிந்து குத்து விளக்கு ஏற்றி ஒரு குடும்பத்திற்குத் தேவையான அனைத்து சாமான்களுடன், மறுவாழ்க்கைத் துவங்க வழி வகுத்தனர். அது மட்டுமல்ல, அந்தப் புது வாழ்வு துவங்கிய நாளில் ஐந்து திருமணங்களையும் நடத்தி வைத்து 5,000 பேருக்கு சமபந்தி போஜனம் அளித்து, எங்கள் ஊராட்சி மக்களின் உள்ளத்திலே அவர்களும் குடிபுகுந்தார்கள். “ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காணுகின்ற” தன்னலம் கருதாத இந்தத் தொண்டர்களின் இயக்கம் மேன்மேலும் வளர்ந்து, இது போன்று துயர் அடைந்த மக்களுக்குத் தொண்டு செய்து அவர்களுடைய நல்லாசியையும் பெற வேண்டுமென்று இறைவனை வேண்டுகிறேன்.

ஆர். குமாரசுவாமி தலைவர், தாயனூர் ஊராட்சி.

அல்லித்துறையில் ஆர். எஸ். எஸ். பணி

கடந்த 1978ல் வந்த வெள்ளத்தில் பல குடும்பங்கள் வீடு, வாசல், தட்டுமுட்டுச் சாமான்கள் முதல் இழந்து நிர்க்கதியாய் தவித்துக்கொண்டு இருந்த நேரத்தில்
ஆர்.எஸ்.எஸ் சார்பில் நேரில் வந்து எங்கள் வீடு, வாசல்களைப் பார்த்துச் சென்ற பிறகு, எங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்து ஆடை முதல் அனைத்தும் கொடுத்து கிரகப்பிரவேசம் செய்து வைத்து, ஓர் விநாயகர் கோவிலும் கட்டிக் கொடுத்து, கும்பாபிஷேகமும் செய்து வைத்து, குடி தண்ணீர் வசதியுடன் ஓர் கிணறும் வெட்டிக் கொடுத்தார்கள்.

இது தவிர சில உதவிகளும் எங்களுக்குச் செய்து கொடுத்தார்கள். நாங்கள் காலனியில் ஓர் கமிட்டி ஏற்பாடு செய்தோம். அந்தக் கமிட்டியின் வாயிலாக பஞ்சாயத்து யூனியனில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தரக் கோரி இருந்தோம். அதில் முதல் உதவியாக குடி தண்ணீருக்கு இரண்டு போரிங் பைப்பு போட்டுக் கொடுத்தார்கள். மேலும் காலனியில் மின் விளக்குகள் அமைப்பதற்கும், சிறு தொழில் செய்வதற்கு கடனுதவி கேட்டு அரசிடம் விண்ணப்பித்தோம்.

ஆர்.எஸ்.எஸ் சங்கத்தினர் எங்களுக்கு இந்த இக்கட்டான காலத்தில் செய்த உதவி மறக்க முடியாத ஒன்று. எனவே அவர்களுக்கு மிகவும் நன்றியும், கடமையும் பட்டுள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொண்டனர்.

எம். சன்னாசி குருக்ஷேத்ர நகர்,

ஆர். எஸ் எஸ். கமிட்டி தலைவர்

சேவையில் முதல்

ஆர்.எஸ்.எஸ்ஸைப் பற்றி தெரிந்து கொள்கிற வாய்ப்பு எனக்கு முதன் முதலில் அவசரநிலை காலத்தில்தான் ஏற்பட்டது. 1977 அக்டோபரிலே மாபெரும் வெள்ளம் வந்து திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் பாதிக்கப்பட்டது. நானும் செயலாளர் இராம கிருஷ்ணனும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும், ஆறுதல் கூறுவதற்காகவும் பல்வேறு இடங்களுக்கு விரைந்து சென்றோம். ஆனால் பல்வேறு இடங்களில் எங்களுக்கும் முன்பாக இந்த
ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்தவர்கள் வந்து சென்றிருப்பதையும் அறிந்து மிக ஆச்சரியப்பட்டேன். ஒரு சமயம் உய்யகொண்டான் திருமலைக்கும் தள்ளி ஒரு பட்டியல் சமூக பகுதிக்கு நாங்கள்தான் முதலாவதாக சென்றோம், எனக்கு முன்னதாகவே
ஆர்.எஸ்.எஸ் சென்றது மட்டுமல்ல, உதவிக்கான திட்டமும், செயல்படுத்துவதைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

என்ன துணிச்சல்! என்ன பயிற்சி !!

இது மாதிரியே திருச்சி சிந்தாமணிப் பகுதி, காந்தி ரோடு, ஸ்ரீரங்கம் பகுதிகளிலும் அவர்கள் அரிசி, துணிமணிகளை வழங்கியதையும், உதவியையும் நேரில் பார்த்தேன். தில்லை நகரில் வெள்ளம் புகுந்த பகுதிகளில் இவர்கள் செய்த உதவி மிக பாராட்டத்தக்கது இதைப்பற்றி சி.ஆர்.சந்தானம் அவர்கள் தன் அனுபவத்தை என்னிடம் கூறினார். ஆர்.எஸ்.எஸ்காரர்கள், வெள்ளத்தில் கஷ்டப்பட்டு வந்து அவரிடம் ஆறுதலாகப் பேசிக் கொண்டிருப்பார்களாம். இதையெல்லாம் நினைத்தால், இவர்கள் இத்தனை துணிச்சலையும், செயல் திறனையும் கொடுத்திருக்கிற ஆர்.எஸ்.எஸ் பணி மகத்தான பணிதான்.

“ஸ்வயம்சேவகர்”

சென்னையிலிருந்தும் பல்வேறு ஊர்களில் இருந்தும், எம்.எஸ்சி., பி.இ., படித்துவிட்டு நல்ல வேலையில் உள்ளவர்களும் விடுப்பு எடுத்து வந்து, வெள்ள நிவாரணப்பணி ஆற்றினார்கள். அவர்கள் தங்கியிருந்த இடத்திலேயே நான் சென்று பார்த்த போது மிகவும் ஆச்சரியப்
பட்டேன். விடுப்பு எடுப்பதால் ஏற்படும் சம்பள இழப்பைப் பொருட்படுத்தாமல், அவர்கள் தங்கள் சொந்த செலவிலேயே வந்து மிக எளிமையாக நண்பர்களுடைய இல்லங்களில் தங்கிக்கொண்டு, பணியாற்றுகிறார்கள், என்பதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இங்கு மாவட்ட கலெக்டர் கூட்டியிருந்த கூட்டத்திலே கூட நான் எடுத்துக் கூறினேன். பி.எச்.இ.எல் –ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் மட்டும் தான் வெள்ள நிவாரண வேலையை ஒழுங்காகச் செய்தார்கள்.

நாட்டில் நல்ல தொண்டர்களை, தேச
பக்தர்களை உருவாக்குகின்ற ஆர்.எஸ்.எஸ் வளர வளர நாட்டின் பிணிகள் பிரச்சினைகள், அனைத்தும் தீர்ந்துவிடும் என என நான் உறுதியாக நம்புகிறேன், ஆர்.எஸ்.எஸ் மேலும் தீவிரமாக வளர வேண்டுமென எல்லாம் வல்ல எங்கள் திருவரங்கத்து ரெங்கனையும், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியையும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்.

–வெங்கடேஸ்வர தீக்ஷதர்

மறக்கத்தான் முடியுமா?

12-11-77ஆம் ஆண்டு சனிக்கிழமையன்று பெரும் சூறாவளிக் காற்றும், பேய் மழையும் மதுரை மாவட்டம், வேடசந்தூரில் ஏற்பட்ட பெருவெள்ளத்தைப் பற்றி யாரும் மறந்திருக்க முடியாது. இதுவரை கண்டிராத அளவிற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிட்டது.

வாழ வழி வகுத்தவர்

அழகான தெருக்களும், அற்புதமான வீடுகளுமாய் காட்சியளித்த வேடசந்தூர், ராஜகோபாலபுரம், குடகனாற்றின் கொடும் பசிக்கு இரையாகி இருந்த இடம் தெரியாமல் வெள்ளக்காடாக மாறிவிட்டது. வீடு,  பாத்திரங்கள் ஏன் அனைத்தையும் இழந்து தவித்தவர்கள் ஒருவர் இருவரல்ல.

கடுங்குளிர் மக்களை வாட்டியது. கடுமையான குளிராலும், தங்குவதற்கு இடமின்றியும் மக்கள் தவித்த காட்சி பரிதாபமாக இருந்தது. சுமார் 200 வீடுகள் வெள்ளத்தின் கொடும்பசிக்கு இரையாகி  விட்டது. அனைத்தையும் இழந்த இவர்கள் வாழ்வதா? சாவதா? என்ற நிலையில் இருந்த நேரத்தில்தான் கைகொடுத்து வாழ்வளித்தார்கள் “ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்”. இந்த அமைப்பைச் சேர்ந்த சகோதரர்களும். பாதிக்கப்பட்ட இடத்தைப் பார்த்துக் கண்கலங்கிய பொழுதும் உள்ளம் தளராது எங்களுக்கு கனிவோடு ஆறுதல் கூறி, ‘உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம், கவலையின்றி இருங்கள்’ என்று உறுதி அளித்தனர். அதை அவர்கள் செயல்படுத்தியதைப் பெருமிதத்தோடு கூறத்தான் வேண்டியிருக்கிறது.

உடனடியாக மரங்கள் கொண்டுவரப்பட்டு, கூரைகள் வேயப்பட்டன. மக்களின் மகிழ்ச்சியை அளவிட இயலுமா? அடுத்த வேளை சோற்றுக்கு வழியைக் காண இயலாமல் இருக்கும் இந்நிலையில், உழைத்து ஓட்டுமொத்தமாக சுமார் 200 வீடுகளைக் கட்டி முடிக்க முடியுமா? சங்க ஸ்வயம்சேவகர்களின் மன உறுதியாலும், கடும் உழைப்பாலும் இது சாத்தியமாகியது.

மறவா சேவை

மக்களின் துயரைப் போக்குவதே,
ஆர்.எஸ்.எஸ் சகோதரர்கள் லட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள். வீட்டைக் கட்டிக் கொடுத்ததோடு நிற்கவில்லை. வீட்டிற்கு விளக்கேற்றி வைத்தவர்களும் இவர்களே. இருநூறு குடும்பங்களுக்குப் புத்துயிர் அளித்து மகிழ்ச்சி பொங்கச் செய்த ஆர்.எஸ்.எஸ் சங்கமும் அதன் சகோதரர்களும் வேடசந்தூர் மக்களின் உள்ளத்தில் நீங்கா இடம்பெற்று விட்டார்கள். இவ்வளவு அரிய சேவை செய்த இவர்களை மறக்கத்தான் முடியுமா?

எனவே, பொதுமக்களாகிய நாமும். பயனை எதிர்பாராமல், ஆர்.எஸ்.எஸ் சங்கத்தைப் போலவும், இச்சங்கத்தின் சகோதரர்களைப் போலவும் மக்களுக்குச் சேவை செய்ய முன்வருவோமாக! வளர்க! வாழ்க! பொது நலத் தொண்டர்கள் இயக்கம்.

– என். சுப்பிரமணி வேடச்சந்தூர

–1979 விஜயபாரதம்

விஜயதசமி சிறப்பு மலர்