வெளிநாட்டு நிதியும், மதமாற்ற அச்சமும்: மதுரை உயர்நீதிமன்றம்

கொடைக்கானலில் இயங்கும் ‘கான்ஸியோன்’ அறக்கட்டளையின் வெளிநாட்டு நிதி (FCRA) உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசின் முடிவை உறுதி செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 2026 அக்டோபர் 7 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
“ஆபிரகாமிய மதங்கள் பிரத்தியேகமானவை (Exclusive); ஹிந்து மதம் அனைத்தையும் உள்ளடக்கியது (Inclusive)” என்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு கருத்து, சட்ட வட்டாரத்திலும், சமூகத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. மதமாற்ற நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு நிதி தாராளமாகப் பாய்ந்தால், நாட்டின் இறையாண்மையும் கலாச்சார பன்மைத்துவம் (Pluralism) சிதையும் என்ற நீதிமன்றத்தின் எச்சரிக்கை கவனிக்கத்தக்கது.
இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, இந்த விதிமுறை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் சார்பானது அல்ல என்பதாகும். மதமாற்றப் பணிகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு, FCRA பதிவு மறுக்கப்பட வேண்டும் என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, ஆன்மீகம் அல்லது சேவை என்ற போர்வையில், மறைமுகமாக மதமாற்றம் நடப்பதைத் தடுப்பதே, இதன் முதன்மை நோக்கம்.
அதேவேளையில், யோகா, வேதாந்தம், பகவத் கீதை போன்ற இந்திய பாரம்பரியக் கல்வியைக் கற்பிக்கும் அமைப்புகளை ‘மத நிறுவனங்களாக’ பார்க்காமல், கலாச்சார அமைப்புகளாகப் பார்க்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் பார்வை, இந்தியாவின் பண்பாட்டு மரபைப் பாதுகாக்கும் முயற்சியாகும். இந்தியாவின் யோகா, வேதாந்தம், பகவத் கீதை, உபநிடதங்கள் போன்ற பாரம்பரிய இந்திய அறிவு முறைகளை (Indian Knowledge Systems – IKS) கற்பிக்கும் அமைப்புகளை ‘மத நிறுவனங்களாக’ வகைப்படுத்தக் கூடாது.
ஆன்மீகம், சேவை அல்லது கலாச்சாரத்தின் போர்வையில், மதச் செயல்பாடுகளை மறைத்து நிதி திரட்டுவது சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாதது. அமைப்புகள் தங்களின் உண்மைத் தன்மையை FCRA படிவத்தில் (Form FC-3A) வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். “இந்தியச் சமூகம் ஒரு கலவையான பழக்கூடை (Salad Bowl); அனைத்தையும் உள்ளடக்கிய பன்மைத்துவமே நமது பலம்.”
வெளிநாட்டு நிதியைக் கொண்டு, சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கவோ அல்லது மக்கள்தொகை அமைப்பை மாற்றவோ முயல்வது, தேசியப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் என்பதை இத்தீர்ப்பு மீண்டும் உறுதிசெய்துள்ளது.
வெளிநாட்டு நிதி என்பது அடிப்படை உரிமையல்ல, அது ஒரு சிறப்புச் சலுகை மட்டுமே. மதப் பின்னணியை மறைத்து நிதி திரட்டுவது வேற்றுமையில், ஒற்றுமையை கேள்விக்குறி ஆக்கும் செயல். இந்திய சமூகத்தின் மதச்சார்பற்ற கட்டமைப்பையும், அமைதியையும் சீர்குலைக்க நினைக்கும் எந்தவொரு நிதிப் பாய்ச்சலும் தடுக்கப்பட வேண்டியதே. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, தேசியப் பாதுகாப்பிற்கும் தனிநபர் மத சுதந்திரத்திற்கும் இடையிலான எல்லையைத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளது!
ஒரு தொண்டு நிறுவனத்திற்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருவதை தடுப்பது, தனிநபர் உரிமையில் தலையிடுவதா அல்லது நாட்டின் பாதுகாப்பைக் காக்கும் நடவடிக்கையா என்ற பரவலான கேள்விக்கு இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பே விடை.

கட்டுரையாளர்:  எம். ஶ்ரீராம்