வெங்கையா நாயுடு வெளியிட்ட காந்தி பற்றிய கட்டுரை

குஜராத் மாநிலம் போர்ப்பந்தரில் 150 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளான அக்டோபர் 2-ந் தேதியன்று, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்தார். அவரது கருத்துகள், யோசனைகள், செயல்பாடுகள் ஆகியவை அவரை மகாத்மாவாக உருவெடுக்கச் செய்தன. அவர் பதித்துச் சென்ற தடம், காலத்தால் அழிக்க முடியாதது.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளான இன்று, இந்த தேசத்துக்கும், இந்த நாட்டு மக்களுக்கும் அவர் ஆற்றிய அளவிட முடியாத பங்களிப்பு குறித்து நினைவு கூரும் நமக்கு, உலக மக்களுக்கும் அவர் விட்டுச் சென்றுள்ள அழியாத மற்றும் தவிர்க்க முடியாத பொக்கிஷமான குணநலன்கள் வியப்பூட்டுவதாக உள்ளன. இந்தியாவின் மிகமுக்கியமான காலகட்டங்களில் அவர் நமக்கு தலைவராக இருந்துள்ளார் என்பது நமக்கு பெருமை அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.

பரம்பரை பரம்பரையாக நாம் அவரால் தொடர்ந்து ஊக்கம் பெற்று வருகிறோம். உலகம் தற்போது எதிர் கொண்டு வரும் சவால்களான பருவகால மாற்றம், தீவிரவாதம், ஊழல் ஆகியவற்றுக்கு தீர்வாக, காந்திய கொள்கைகள்தான் ஒழுக்க மார்க்கத்துக்கான திசைகாட்டியாக உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி ஒருமுறை மிகச் சரியாக சுட்டிக்காட்டினார்.

காந்தியின் சத்தியாகிரகம் பற்றிய கோட்பாடுகள்தான் சமூக மாற்றத்திலும், அரசியலிலும் வலிமையான கருவியாக உருவெடுத்தன என்பதை வரலாறு நிரூபித்துக் காட்டியுள்ளது. மகாத்மா காந்தி ஒருமுறை உரையாற்றும்போது, “‘மனிதவர்க்கத்துக்கு தேவையான ஒரு மகத்தான சக்தி அகிம்சையாகும். மனிதன் தன் புத்திகூர்மையால் உருவாக்கி வைத்துள்ள அழிவுக்கான பலத்த ஆயுதங்களைவிட மிகுந்த பலமிக்கது அகிம்சை” என்று குறிப்பிட்டார்.

அக்டோபர் 2-ந் தேதியை சர்வதேச அகிம்சை தினம் என்று ஐக்கிய நாடுகள் அறிவித்திருப்பதன் மூலம், இந்தியன் என்ற முறையில் நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும். உலகம் முழுவதும் அகிம்சையின் கொள்கைகள் பரவ வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையும் தீர்மானித்தது. அமைதி, சமாதானம், சகிப்புத்தன்மை, புரிந்துகொள்ளும் தன்மை, அகிம்சை ஆகியவற்றின் அடிப்படையிலான கலாசாரத்தை பாதுகாப்பதற்கான அவசியத்தையும் வலியுறுத்தியது.

மனிதனின் இயற்கை குணங்களை அவர் நன்றாக அறிந்து வைத்திருந்தார். வன்முறை, அடக்குமுறை ஆகியவற்றை அகிம்சையாலும், இரக்கத்தினாலும், மனிதாபிமானத்தினாலும் தான் எதிர்கொள்ள வேண்டும் என்பதை தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது கற்றுக்கொண்டார். 1920-ம் ஆண்டில் ‘இளம் இந்தியா’ கட்டுரையில் அவர், “உண்மை, அகிம்சை மூலமாகத்தான் நாம் பாதுகாக்கப்பட வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. போர் என்பது தவறானது மட்டுமல்ல, கடுமையான தீமையை விளைவிக்கக் கூடியது. ரத்தம் சிந்துதல் தான் விடுதலையை அடையச் செய்யும். அப்படி இல்லை என்றால் விடுதலையும் இல்லை” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்தியாவில் காலனி ஆதிக்கத்தின் போது இந்தியர்கள் மீது பாய்ச்சப்பட்ட வன்முறைகள், அடக்குமுறைகள் ஆகியவற்றை எதிர்த்து, அகிம்சையை ஆண்மையுள்ள ஆயுதமாக காந்திஜி பயன்படுத்திய முறையும், அதில் அவருக்கிருந்த நோக்கமும், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், நெல்சன் மண்டேலா, ஹோ சி மிங் போன்ற பல உலகத் தலைவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தின.

மக்களை மையமாக வைத்து வளர்ச்சிகள் இருக்க வேண்டும் என்ற அவரது கோட்பாடு, இன்றைக்கும் பொருந்துவதாக உள்ளது. மக்களிடையே நல்ல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் நிர்வாகம் பற்றிய காந்தியின் எண்ணமாக இருந்தது. அடிநிலையில் இருந்து சுதந்திரம் தொடங்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசாக அல்லது முழு அதிகாரம் கொண்ட ஊராட்சியாக இருக்க வேண்டும்.

அது கடலளவு பரந்த வட்டம் என்றாலும் அதன் மையப்புள்ளியாக ஒவ்வொரு தனிநபரின் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்பதை அவர் தன்னகத்தே கொண்டிருந்தார். ஒருமித்த, நிலையான முன்னேற்றத்தை அடைய, கீழ்நிலையில் இருந்து மேலெழுந்து செல்லும் வழியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே காந்தியின் கனவாக இருந்தது.

அவர் தனது லட்சிய உலகத்தை ராமராஜ்யத்துடன் ஒப்பிட்டிருந்தார். ஏனென்றால் அது உண்மையான ஜனநாயகத்துக்கு உதாரணம் காட்டியது. அவர், “எனது கற்பனைப்படி ராமர் இந்த பூமியில் வாழ்ந்தாரோ, இல்லையோ, ஆனால் ராமராஜ்யத்தின் பண்டைய லட்சியம், உண்மையான ஜனநாயகம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதாவது, ஒவ்வொரு குடிமகனுக்கும் நீண்ட மற்றும் அதிக செலவில்லாத முறைப்படி விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான்” என்று கூறியிருக்கிறார்.

நரேந்திரமோடியின் ஆட்சி காலத்துக்கும், காந்தியின் கிராம சுயராஜ்யம் பற்றிய கனவுக்கும் தொடர்பு உள்ளது. கிராமங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கி அதன் மூலம் நகர்ப்புறத்துக்கும், கிராமபுறத்துக்குமான இடைவெளியை நிரப்ப நரேந்திர மோடியின் தலைமையிலான அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தீண்டாமை என்பதை பாவம் மற்றும் கொடுங்குற்றம் என்றும் கூறிய அவர், அந்த பாம்பை இந்துயிசம் அழிக்காவிட்டால், அது ஒரு நாளில் விழுங்கப்பட்டுவிடும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். சுத்தம், சுகாதாரத்தை காந்தி மிகவும் வலியுறுத்தி இருக்கிறார். 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்த சுவாட்ச் பாரத் திட்டம், காந்தியின் கொள்கைகளை செயல்பாட்டின் மூலம் பாராட்டுவதாக அமைந்திருந்தது.

7 அம்சங்களை மோசமான குற்றங்களாகக் கருதி அவற்றை விலக்க வேண்டும் என்று காந்தி வலியுறுத்தி இருக்கிறார். அவை, உழைக்காமல் கிடைக்கும் சொத்து; மனசாட்சியில்லாமல் கிடைக்கும் சந்தோஷம்; நல்ல குணமற்று கிடைக்கும் அறிவு; நெறிமுறையற்ற வர்த்தகம்; மனிதாபிமானத்தை நினைக்காத அறிவியல்; தியாகம் இல்லாத மதநெறிகள்; கொள்கை இல்லாத அரசியல் ஆகியவைதான்.

பிரார்த்தனையின் பலத்தை காந்தி நம்பினார். அதன் மூலம் அடக்கமும், சுத்தமான இதயமும் கிடைக்கும் என்பது அவரது நம்பிக்கையாக இருந்தது. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் நாம், அவர் காட்டிய கொள்கைகளை நமது அன்றாட வாழ்வில் செயல்படுத்தும் அளவுக்கு நம்மை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும்.

– வெங்கையா நாயுடுஇந்திய துணை ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *