கடந்த 2022ம் ஆண்டில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விவரங்களை காஷ்மீர் காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு மொத்தம் 93 என்கௌண்டர்கள் நிகழ்ந்துள்ளன. இதில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த 42 வெளிநாட்டு பயங்கரவாதிகள் உள்பட 172 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். 360 ஆயுதங்கள், வெடிகுண்டுகள், வெடிகுண்டு தயாரிக்கப்பயன்படும் பொருட்கள் உள்ளிட்டவையும் அதிக அளவில் பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 108 பேர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பையும், 35 பேர் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பையும் சேர்ந்தவர்கள். மேலும், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த 22 பேர், அல் பதர் அமைப்பின் 4 பேர், 3 பேர் அன்சர் கஷ்வாதுல் ஹிந்த்தின் 3 பேர் இதில் அடங்குவர். பயங்கரவாத அமைப்புகளில் இணைபவர்களின் ஆயுட்காலம் கடந்த காலங்களோடு ஒப்பிடும்போது தற்போது மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்த ஆண்டு பயங்கரவாத அமைப்புகளில் புதிதாக இணைந்த 65 பயங்கரவாதிகளில் 58 பேர், அவர்கள் இணைந்த முதல் மாதத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் தாக்குதலில் பொதுமக்கள் 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் காஷ்மீர் ஹிந்துக்கள். 15 பேர் முஸ்லிம்கள், 8 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் பசித் தர், அதில் வானி எனும் இரண்டு பயங்கரவாதிகளைத் தவிர மற்ற அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். இந்த இருவரும் கூட விரைவில் கொல்லப்படுவார்கள். பயங்கரவாதிகளுடனான தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 26 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 14 பேர் ஜம்மு காஷ்மீர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என காஷ்மீர் ஏ.டி.ஜி.பி விஜய்குமார் தெரிவித்துள்ளார்.