சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடமும், தில்லி ராமகிருஷ்ண மிஷனும் இணைந்து இந்த குறும்படத்தை உருவாக்கியுள்ளன. அதில் சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக இந்தியாவில் இருந்த நிலையையும், அந்நியப் படையெடுப்புகளால் தேசம் எதிர்கொண்ட பாதிப்பையும் அவரது கோணத்தில் இருந்து விளக்குவதைப் போல, குறும்படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கன்னியாகுமரியில் சுறாக்கள் உலாவும் கடலில் குதித்து, அலைகளுக்கிடையே அவர் நீந்திச் சென்று இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ள பாறையில் அமர்ந்து மூன்று பகல், மூன்று இரவுகள் தியானம் செய்து, இந்தியாவின் கலாசாரத்தை மீட்டெடுப்பதற்கான வழிகளைக் கண்டறிந்ததையும் இது விளக்குகிறது. காட்சிகள் அனைத்தையும், பார்வையாளர்கள் ஒரு படகு போன்ற அமைப்பில் அமர்ந்தபடி, தற்போதுள்ள கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்துக்கு முற்பட்ட 1890 கால கட்டத்துக்குச் சென்று, விவேகானந்தரின் வாழ்வில் நடந்த அந்தச் சம்பவத்தை நேரடியாகக் காண்பது போல 4டி காட்சியாக இந்தக் குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை விவேகானந்தர் இல்லத்தில் அமைக்கப்பட்டிருக்கும் படகு போன்ற அமைப்பு, விடியோ காட்சி அடங்கிய அரங்கை, மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பிரகலாத்சிங் படேல் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.