சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம், ரபேல் போர் விமான ஒப்பந்தம், காங்., முன்னாள் தலைவர் ராகுல் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில், இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகோய், வரும், 17ல் ஓய்வு பெறுகிறார். அதற்கு முன், தான் விசாரித்த பல்வேறு வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கிட அவர் திட்டமிட்டார். நீண்டகாலமாக பிரச்னையில் இருந்த அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.
அதைத் தொடர்ந்து, ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்றம் வருமா என்ற வழக்கில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மூன்று முக்கிய வழக்குகளில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வுகள் தீர்ப்புகளை அளிக்க உள்ளன.
சபரிமலை வழக்கு
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில், பம்பை நதிக்கரையில் அமைந்துள்ளது, உலகப் புகழ்பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவில். இந்தக் கோவிலுக்கு செல்ல, 10 – 50 வயது பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்தாண்டு, செப்.,ல் தீர்ப்பு அளித்தது. ‘அனைத்து வயது பெண்களும், எந்தப் பாகுபாடு இல்லாமலும் சபரி மலைக்கு செல்லலாம்’ என, தீர்ப்பில் கூறப்பட்டது.
இந்த தீர்ப்பை செயல்படுத்த மாநில அரசு முயன்றது. ஆனால், பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்தாண்டு மண்டல கால பூஜையின்போது, சபரிமலைக்கு செல்வதற்கு பல பெண்கள் முயன்றனர். ஆனால், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்தப் பிரச்னையால், பல இடங்களில் வன்முறையும் நடந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, பல்வேறு தரப்பினர், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
மொத்தம், 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. நீதிபதிகள் ஆர்.எப்.நரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா அடங்கிய அமர்வு, வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல், இந்தாண்டு, பிப்., 6ல் ஒத்தி வைத்தது. சபரிமலைக்கான இந்தாண்டு மண்டல கால பூஜைகள், 17ல் துவங்க உள்ளன. இந்த நிலையில், இந்த முக்கியமான வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
‘ரபேல்’ வழக்கு
‘விமானப் படைக்கு, ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து, ‘ரபேல்’ ரக போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக எந்த முகாந்திரமும் இல்லை’ என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்கள் மீதும், இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. விமானப்படைக்கு, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு, பிரான்சின், ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்துடன், 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
முன்னாள் மத்திய அமைச்சர்களான, பா.ஜ., அதிருப்தியாளர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த, உச்ச நீதிமன்ற அமர்வு, கடந்தாண்டு, டிச., 14ல் தீர்ப்பு அளித்தது. ‘இந்த ஒப்பந்தம் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை’ என, தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, யஷ்வந்த சின்ஹா, அருண் ஷோரி, பிரஷாந்த் பூஷண் உள்ளிட்டோர், சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம். ஜோசப் அமர்வு விசாரித்து. இந்தாண்டு, மே, 10ல், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்ப்டடது; இன்று, தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
ராகுல் வழக்கு
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. அப்போது, ‘ராணுவ அமைச்சகத்தில் இருந்து திருடப் பட்ட ஆவணங்கள், ஆதாரங்களாக கொடுக்கப்பட்டுள்ளன. அதை ஏற்கக் கூடாது’ என, மத்திய அரசு வாதிட்டது. இந்தாண்டு, ஏப்., 10ல் நடந்த இந்த வாதத்தின்போது, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்தது.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடியை குறிக்கும் வகையில், இந்த தீர்ப்பு குறித்து, காங்., தலைவராக இருந்த ராகுல் கருத்து தெரிவித்தார். ‘சோக்கிதார் எனப்படும் காவலாளி என்று கூறிக் கொள்பவர்கள் திருடர்கள் என்பதை உச்ச நீதிமன்றமே உறுதி செய்துவிட்டது’ என, அவர் கூறினார்.
அதையடுத்து, ராகுல் மீது, பா.ஜ.,வைச் சேர்ந்த, மீனாட்சி லேகி, நீதிமன்ற அவதுாறு வழக்கை தொடர்ந்தார்.’நீதிமன்றம் கூறாததை, நீதிமன்றம் கூறியதுபோல் கருத்து தெரிவித்துள்ளது, நீதிமன்ற அவமதிப்பு’ என, அவர் வழக்கு தொடர்ந்தார். ‘மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வழக்கை சந்திக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் கூறியது. தன் கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக, ராகுல் கூறியிருந்தார். ‘ராகுல் வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளார்.
அதனால் அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர வேண்டும்’ என, மீனாட்சி லேகி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.