சபரிமலை மறு ஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய அனுமதித்து அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை காலை வழங்க உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும், இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, நாயர் சர்வீஸ் சொசைட்டி உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 64 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கேரள அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் ஜெய்தீப் குப்தா, விஜய் ஹன்சாரியா, திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் சார்பில் ராகேஷ் துவிவேதி ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி இறுதி வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் அமர்வில் இடம்பெற்றுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இந்த வார இறுதியில் பணி ஓய்வு பெற இருப்பதால், அதற்கு முன்பாக இந்த வழக்குகளில் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நவம்பர் 14ம் தேதி, சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.