ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் அமைப்புச் சட்டத்தின், 370வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானம். இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா, லோக்சபாவில் நேற்று நிறைவேறியதை அடுத்து, பார்லிமென்டின் ஒப்புதலை பெற்றன.
உள்துறை அமைச்சர், அமித் ஷா, ராஜ்யசபாவில், நேற்று முன்தினம் தாக்கல் செய்த, இதற்கான தீர்மானம் மற்றும் மசோதா, அங்கு நிறைவேறியது. நேற்று முன்தினமே, இரண்டும், லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டன.இது தொடர்பான விவாதம், லோக்சபாவில் நேற்று காரசாரமாக நடந்தது. பல கட்சிகளின் உறுப்பினர்கள், பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அவற்றிற்கு பதிலளித்து, அமித் ஷா பேசினார். பின், ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக, 351 ஓட்டுகளும், எதிர்த்து, 72 ஓட்டுகளும் பதிவாகின.
வரலாற்று பிழை சரியானது – அமித் ஷா
வரலாற்றின் மிகப் பெரிய தவறை செய்து விட்டோம் என்கின்றனர். அது தவறு. வரலாற்றின் மிகப் பெரிய தவறை சரி செய்துள்ளோம். ஜம்மு – காஷ்மீரில், 1989 முதல், 41 ஆயிரத்து, 400 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதற்கு காரணமாக இருந்த, சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. மாநில அந்தஸ்து தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. நிலைமை சீரடைந்தால், மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், நம் நாட்டின் ஒரு பகுதி தான். காஷ்மீரில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சட்டம் – ஒழுங்கு பிரச்னையை கருதி தான், முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
புதிய விடியல் காத்திருக்கிறது – பிரதமர் மோடி
‘ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு, புதிய விடியல் காத்திருக்கிறது’ என, பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
ஜம்மு – காஷ்மீர் தொடர்பான தீர்மானம் மற்றும் மசோதா, பார்லிமென்டில் நிறைவேறியது, மறக்க முடியாத தருணம். அந்த மாநிலத்திற்கு, புதிய விடியல் காத்திருக்கிறது. நாம் ஒற்றுமையாக இருப்போம்; ஒன்றாக முன்னேறுவோம்; 130கோடி இந்தியர்களின் கனவை நிறைவேற்றுவோம்.பல ஆண்டுகளாக, சில தீய சக்திகள், மக்களின் உணர்ச்சிகளை துாண்டி, ‘பிளாக்மெயில்’ செய்வதை வழக்கமாக கொண்டிருந்தன. மக்களுக்கு அதிகாரம் கிடைப்பதில், அந்த தீய சக்திகளுக்கு விருப்பம் இல்லை. இப்போது, கட்டுத்தளையிலிருந்து, அந்த மாநிலம் விடுபட்டுள்ளது; சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது.
தீரத்துடனும், பொறுமையுடனும் இருந்த, ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி சகோதர, சகோதரிகளை வணங்குகிறேன் என பிரதமர் மோடி கூறினார்.