நாடு முழுதும் ஹோலி பண்டிகை இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாகவே ஹோலி கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இந்நிலையில், உலகின் மிக உயரமான எல்லை பாதுகாப்பு பகுதியான சியச்சின் மலை உச்சியில், ராணுவ வீரர்களுடன் ஹோலி கொண்டாடப் போவதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்திருந்தார்.
அங்கு, வானிலை சாதகமாக இல்லை என கூறப்பட்டதை அடுத்து, லடாக்கில் உள்ள லே ராணுவ தளத்தில் இருந்த ராணுவ வீரர்களுடன் நேற்று அவர் ஹோலி பண்டிகையை கொண்டாடினார். அங்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களின் நெற்றியில் வண்ண திலகமிட்டு, வாழ்த்துகளை அமைச்சர் தெரிவித்தார். அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:
நாட்டின் தலைநகரம் டில்லி. பொருளாதாரத்தின் தலைநகரம் மஹாராஷ்டிராவில் உள்ள மும்பை. கர்நாடகாவில் உள்ள பெங்களூரு தொழில்நுட்பத்தின் தலைநகரமாக விளங்குகிறது. அதுபோல், தைரியம் மற்றும் துணிச்சலின் தலைநகராக லடாக் உள்ளது. கடுமையான வானிலையை சமாளிக்க முடியாமல் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் ஒளிந்து கொள்ள விரும்பும்போது, எந்த சூழலை பற்றி துளியும் கவலைப்படாமல், அசைக்க முடியாத மன உறுதியுடன், எதிரிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க நீங்கள் நிற்கிறீர்கள்.
உங்கள் அர்ப்பணிப்புக்கும், சேவைக்கும் நாடு எப்போதும கடமைப்பட்டிருக்கும்.எதிரிகளிடம் இருந்து எங்களை பாதுகாக்கும் நீங்கள் கடவுளுக்கு சமமானவர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.