லகு உத்யோக் பாரதி அமைப்பு என்பது அகிலபாரத அளவிலான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஒரு அமைப்பு. இதில், தொழில் துறையினர், தொழில் முனைவோரின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தில் 1,700க்கும் மேற்பட்டோர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் முதல் முறையாக உலக மகளிர் தினத்தன்று லகு உத்யோக் பாரதியின் பிரத்தியேக பெண்கள் பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா கோவையில் உள்ள கோஇந்தியா வளாகத்தில் நடைபெற்றது. லகு உத்யோக் பாரதியின் மாநிலத் தலைவர் விஜயராகவன், ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவன இயக்குனரும் லகு உத்யோக் பாரதியின் தமிழகத் துணைத் தலைவருமான கல்யாண சுந்தரம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பெண் தொழில் முனைவோருக்கான மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள், சலுகைகள், வாய்ப்புகள், பயிற்சிகள் போன்றவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.