ஐதராபாத்தில் ரூ. 1000 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது ராமானுஜரின் 216 அடி உயர ஐம்பொன் சிலை. வரும் 5ம் தேதி திறந்து வைக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சிறப்பு யாகபூஜை நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன. ‘ஓம் நமோ நாராயணா’ என்ற 8 எழுத்து மந்திரத்தை உலகறிய செய்ய கோயில் கோபுரம் மீது ஏறி அனைவருக்கும் போதித்தவர் ராமானுஜர். வேதத்தை அழகு தமிழில் பாசுரங்களாய் எழுதிய நம்மாழ்வாரின் பெயரை நிலை நாட்டியவர். தீண்டாமையை ஒழிக்க வித்திட்டவர். இவர் பிறந்து 1,000 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, அவருக்கு தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள ராமாநகரில் 216 அடி உயரத்தில் 1,500 டன் ஐம்பொன்னாலான சமத்துவ சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை சுற்றி 108 திவ்ய தேச பெருமாள் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிலையில் 120 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. தாமரை மலர் பீடம் மீது ராமானுஜர் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் வகையில் பிரமாண்டமாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் 200 கிலோ எடையில் தங்க சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 108 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, நடுவே யானைகள் தாங்கி பிடிக்கும் வகையில் 54 இதழ்களுடன் 27 அடி உயரத்தில் தாமரை பீடம் 2 அடுக்குகளில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 அடுக்குகளிலும் 18 சங்கு, 18 சக்கரங்கள் இடம் பெற்றுள்ளன. பீடம் 108 அடி, சிலை 108 அடி என 216 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இது உலகின் 2வது மிகப்பெரிய ஐம்பொன் சிலையாகும். சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அடுத்த படியாக ராமானுஜரின் சிலை உயர்ந்த சிலையாக கருதப்படுகிறது. இங்கு செயற்கை நீர் வீழ்ச்சி தூண், ஆன்மிக நூலகம், உணவகம், தியான வளாகம் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன. சிலையை உருவாக்கும் பணி கடந்த 2016ல் திரிதண்டி சின்ன ஜீயர் சுவாமிகளால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சமுத்துவ ராமானுஜர் சிலையை வரும் 5ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் 13ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இங்கு தரிசனம் செய்ய உள்ளார். 14ம் தேதிக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.