ராமருக்காக நான் கொடுக்கிறேன்

“ராமர் கோயிலுக்காக நாம் அளித்த பணம் முறையாகப் பயன்படுத்தப்பட்டதா..?”
இந்த எண்ணம் ஒவ்வொரு ராம பக்தரின் மனதிலும் இயல்பாக இருக்கும். அயோத்தி ராமர் கோயிலுக்காக அளிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் வெறும் பணம் அல்ல, பல ஆண்டுகளாக மனதில் சுமந்திருந்த ஒரு கனவின் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை. ஒருவர் தன்னால் முடிந்த அளவு கொடுத்த சிறிய காணிக்கையாக இருக்கலாம்; மற்றொருவர் பெருமளவில் வழங்கிய நன்கொடையாக இருக்கலாம். ஆனால் அதன் பின்னால் இருந்த உணர்வு ஒன்றுதான் — “ராமருக்காக நான் கொடுக்கிறேன்.”
அதனால், அந்தக் காணிக்கைப் பணத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற செய்தி வெளிவரும் போது, அது ஒரு சாதாரண நிதி விவகாரமாக நம்மால் பார்க்க முடியாது. மனதில் ஒரு வலி ஏற்படுகிறது. “நாம் கொடுத்த பணம் சரியாகச் சென்றதா?” என்ற கேள்வி எழுகிறது.
அதிலும் முக்கியமாக, நாம் எப்போதும் நேர்மையாகவும், முறையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பும் நிலையில், நம்மை நோக்கி ஒரு விரல் சுட்டிக்காட்டும்போது, அது ஒரு விதமான மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. “குற்றச்சாட்டு உண்மையல்ல என்பதை நாம் நிரூபிக்க வேண்டும்” என்ற பொறுப்பு இன்னும் அதிகமாக உணரப்படுகிறது.
அந்தப் பின்னணியில்தான் அயோத்தி ராமர் கோயில் நன்கொடை தொடர்பான சமீபத்திய விளக்கங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்காக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ₹3,300 கோடி நன்கொடை முழுமையாகக் கணக்கில் இருப்பதாகவும், அது முறையாக தணிக்கை (Audit) செய்யப்பட்டுள்ளதாகவும் விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) அகில உலகத் தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.
ஆர்கனைசர் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், “ராமர் கோயில் கட்டுமானத்திற்காக சேகரிக்கப்பட்ட ரூபாய் 3,300 கோடியும் ஸ்டேட் பேங்க் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகவும், இந்த நன்கொடைகள் தொடர்பாக தணிக்கை ஆட்சேபனை (Audit Objection) எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்தக் கூற்று, ராமர் கோயில் நிதி நிர்வாகம் தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு, முக்கியமான விளக்கமாக முன்வைக்கப்படுகிறது.
அதே நேரத்தில், ராமர் கோயிலுக்கு தரும் பக்தர்களின் காணிக்கைப் பணத்தை (சடாவா) எண்ணும் பணியில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடு தனியான சம்பவம் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
இங்கு ஒரு முக்கியமான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது அவசியம். ஒருபுறம், கோயில் கட்டுமானத்திற்காக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ரூபாய் 3,300 கோடி நன்கொடையின் கணக்குகள் உள்ளன. இவை மிகச் சரியாக உள்ளன. மறுபுறம், கோயிலுக்கு பக்தர்கள் நேரடியாகச் செலுத்தும் பணக் காணிக்கையை எண்ணி, இயந்திரம் மூலம் செயல்படுத்தும் பணியில் ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, இது ஒரு தனிப்பட்ட சம்பவம்.
கிடைத்த தகவல்களின்படி, இந்தப் பணத்தை எண்ணும் பொறுப்பு வங்கியிடம் இருந்தது. அந்தப் பணிக்காக வங்கியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட சைனிக் செக்யூரிட்டி சர்வீசஸ் (Sainik Security Services) நிறுவனத்தின் ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் ஆறு வெளிப்புற ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் யாரும் ஸ்ரீராம்ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால், உண்டியல் திருட்டுச் சம்பவத்தையும், கோயில் அறக்கட்டளையின் ஒட்டுமொத்த நிதி நிர்வாகத்தையும் ஒன்றாகக் கருதக் கூடாது என்ற விளக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கதே!
ஸ்ரீராம்ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளையின் செலவுகள்
கிடைத்த தகவல்களின்படி, அறக்கட்டளையின் முக்கிய செலவுகளில் சுமார் ₹ 1,800 கோடி கோயில் கட்டுமானத்திற்காகவும், சுமார் ₹400 கோடி நிலம் கையகப்படுத்துவதற்காகவும் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் பரிவர்த்தனைகள் வங்கியின் வழியாக நடைபெற்றதாகவும், இந்தச் செலவுகள் அனைத்தும் பணமாக இடம் பெறவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலம்: பணம் எவ்வாறு செலுத்தப்பட்டது?
ராமர் கோயில் திட்டத்திற்காக வாங்கப்பட்ட நிலங்களின் விலை தொடர்பாகவும் கேள்விகள் எழுந்திருந்தன. அதற்கு அதிகாரிகள் அளித்த விளக்கத்தின்படி, கோயிலுக்காக இணைந்த பகுதிகளில் வாங்கப்பட்ட நிலங்களுக்கு 100 சதவீத பணமும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கணக்குகளிலிருந்து நேரடியாக வங்கி வழியாகச் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தின் விலை அதிகரித்ததற்கு பல காரணங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ஏற்பட்ட சந்தை விலை மாற்றங்களும், அந்த நிலங்களில் இருந்த வணிகக் கட்டமைப்புகளுக்கான தீர்வுகளும், நிலம் கையகப்படுத்தும் செலவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் விளக்கியுள்ளனர். காணிக்கைப் பணம் தொடர்பான திருட்டுச் சம்பவம் குறித்து மறுசீரமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில், மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமையில் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
பக்தர்களின் நம்பிக்கை தொடர்ந்து நிலைத்திருக்கிறது
இந்த சர்ச்சைகள் எழுந்தபோதிலும், ராமர் கோயிலுக்கான பக்தர்களின் காணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி இல்லை என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026–27 நிதியாண்டின் முதல் காலாண்டில், கோயில் உண்டியில் மாதத்திற்கு சராசரியாக சுமார் ₹5 கோடி காணிக்கை கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஒரு முக்கியமான விஷயத்தை வெளிப்படுத்துகிறது. கோயில் மீது பக்தர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வெறும் பணத்தில் அளக்க முடியாதது.
அயோத்தியில் ராமர் கோயில் எழ வேண்டும் என்ற கனவு, பல தலைமுறைகளின் மனதில் இருந்தது. அந்தக் கனவு நனவாகியபோது, அதில் தங்களுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் லட்சக்கணக்கான மக்கள் தங்களால் இயன்றதை வழங்கினர்.
கோயில் அறக்கட்டளை, இந்த விவகாரம் குறித்து இவ்வளவு விரிவாக விளக்கம் அளிக்க முன்வந்திருப்பது, ராம பக்தர்களின் உணர்வுகளுக்கும், நம்பிக்கைக்கும் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. நடந்த சம்பவம் குறித்து தெளிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், இனிவரும் காலங்களிலும் பக்தர்களின் நம்பிக்கை எந்த வகையிலும் பாதிக்கப்படாதபடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் வரவேற்கத்தக்கது.
ராமருக்காக தாங்கள் அளித்த காணிக்கை பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு மீண்டும் ஏற்பட்டுள்ளது. தங்களுடைய சிறிய காணிக்கையில்கூட ராமரின் திருப்பணியில் தங்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்ற பெருமிதத்துடன் கொடுத்த பணம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறியும் போது, பக்தர்களின் மனதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.

கட்டுரையாளர்: மருத்துவர் சுபா